பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
10:04
பாங்காக்; தாய்லாந்தில், புத்தாண்டை ஒட்டி நடந்த தண்ணீர் திருவிழாவில் நாடு முழுதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தாய்லாந்தின் புத்தாண்டை வரவேற்க, ‘சாங்க்ரான்’ என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. நல்லிணக்கம், அமைதி மற்றும் சமூக பிணைப்பை பிரதிபலிக்கும் இந்த திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் 13 – 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தண்ணீரை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. தாய்லாந்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களுடன் இணைந்து இந்த தண்ணீர் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் தண்ணீர் துப்பாக்கிகளை ஏந்தி, வீதிகளில் வருவோர் மீது தண்ணீரை உற்சாகமாக பீய்ச்சி அடிப்பர். பதிலுக்கு அவர்களும் தங்கள் கையில் இருக்கும் பொருட்களில் உள்ள தண்ணீரை கண்ணில் படுபவர்கள் மீது ஊற்றுவர். ஏப்ரல் மாதத்தில் கடும் வெப்பத்தை சந்திக்கும் தாய்லாந்து மக்கள், இந்த தண்ணீர் திருவிழா வாயிலாக குளிர்ந்த சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்த திருவிழாவின் போது, புத்தரின் சிலைகள் மீது நறுமண நீரை ஊற்றி வழிபடுவதை தாய்லாந்து மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஒருசில நகரங்களில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த தண்ணீர் திருவிழா, கடற்கரை நகரமான பட்டாயா உட்பட பல்வேறு இடங்களில் 10 நாட்கள் வரை நீடிக்கிறது. பாங்காக், சியாங் மாய், சாங்க்லா, சூரத் தானி போன்ற நகரங்களில் ஒரு மாதமாக கூட இந்த தண்ணீர் திருவிழா கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள், துறவிகள் மீது தண்ணீரை ஊற்றக் கூடாது போன்ற விதிமுறைகளும் பாதுகாப்பு கருதி இந்த தண்ணீர் திருவிழாவில் பின்பற்றப்படுகிறது.