பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
04:04
பன்ட்வால் தாலுகாவில், விட்லாவின் மாடத்தட்கா என்ற இடத்தில் உள்ள முக்கியமான திருத்தலங்களில், காரிஞ்சேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் பல சிறப்புகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. பக்தர்களை தன் வசம் ஈர்க்கிறது. தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவின், விட்லாவில் மாடத்கா என்ற இடத்தில் மலை மீது, காரிஞ்சேஸ்வரர் குடிகொண்டுள்ளார். இது கடல் மட்டதில் இருந்து, ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நேமோற்சவம் நடக்கிறது. மாதந்தோறும் சங்கராந்தியன்று கோவிலில் விளக்கேற்றி, பிரார்த்தனை செய்யும் சம்பிரதாயம் உள்ளது.
மிகவும் உயரமான மலையில், இயற்கை எழில் சூழ்ந்துள்ள கோவிலின் அழகை பார்ப்பதே, கண்களுக்கு விருந்தளிக்கும். மஹாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்த போது, இந்த இடத்தில் நடமாடியதாக புராணங்கள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்தும் அடையாளங்கள் இங்குள்ளன. மலை உச்சியில் நின்று பார்த்தால், தட்சிண கன்னடா மாவட்டம் முழுமையாக தெரியும். சுற்றுப்புற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இயற்கை எழிலை அனுபவிக்க, சுற்றுலா பயணியரும் வருகின்றனர். காலை முதல் மாலை வரை இங்கு பொழுது போக்கிவிட்டு, மன நிறைவுடன் திரும்புகின்றனர். மலையேற்றத்துக்கு பெருமளவில் வருகின்றனர். சாகச பிரியர்களுக்கு பிடித்தமான இடம். வாரந்தோறும் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அமாவாசை நாளில் இங்கு வந்து, தீர்த்த குளத்தில் புனித நீராடினால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர், கருப்பு கற்கள் நிறைந்த இப்பகுதி சுரங்கம் போன்று தென்படுகிறது. சுற்றுப்பகுதிகளில் சுரங்க தொழில் அதிகம் நடக்கிறது. சில சுரங்க தொழில் முறைப்படியும், பலர் சட்ட விரோதமாகவும் நடத்துகின்றனர். அதிக வீரியம் கொண்ட வெடி பொருட்களை பயன்படுத்தி, பாறைகள் தகர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக காரிஞ்சேஸ்வரர் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பக்தர்கள் அஞ்சுகின்றனர். – நமது நிருபர் –