பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
04:04
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி கிராமத்தில் ராஜ ராஜேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அசோக மன்னரின் சரித்திர கல்வெட்டில், இக்கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன், சுரத மஹாராஜா, இப்பகுதியை ஆட்சி செய்து வந்தார். எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, ராஜ்யத்தை பறிகொடுத்தார். மூன்று ஆண்டுகள் வனத்தில் தவம் செய்தார். அவரது கனவில் தோன்றிய ஆதி சக்தி, தனக்கு கோவில் கட்டும்படி கட்டளையிட்டார். அதன்படி பொளலி கிராமத்தில் கோவிலை கட்டினார். இதில் ராஜ ராஜேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார். சுப்ரமண்யர், விநாயகர், பத்ரகாளி விக்ரகங்களையும், மும்மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன்பின் இழந்த ராஜ்யம், செல்வங்கள் அவருக்கு திரும்ப கிடைத்ததாம்.
மண் விக்ரகம்; இந்த ராஜ ராஜேஸ்வரி விக்ரகம், மண்ணால் உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூஜிக்கின்றனர். இது சாதாரணமான மண் அல்ல. கல்லை போன்றே உறுதியானது. மண்ணுடன், பல்வேறு மரங்களின் சாற்றை கலந்து, மிக சிறப்பாக உருவாக்கி உள்ளனர். பொளல் என்றால் மண் என அர்த்தமாகும். இந்த விக்ரகம், 9 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டது. இந்தியாவில் இவ்வளவு பெரிதான மண் விக்ரகம், வேறு எங்கும் இல்லை. விக்ரகம் கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டது. மணிமுடியில் வைர கிரீடம் சூட்டப்பட்டிருக்கும். சுரத மஹாராஜா காணிக்கையாக கொடுத்தது. மனமுருகி வேண்டினால் வாழ்க்கையில் உள்ள துக்கம் நீங்கி, மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம். ராஜ ராஜேஸ்வரிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், சுப்பிரமணியருக்கும் அளிக்கப்படுகிறது. தினமும் காலை, மதியம், இரவு என, மூன்று கால பூஜைகள் நடக்கின்றன. செவ்வாய், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் இரவு வேளையில், பத்ரகாளிக்கு காயத்ரி பூஜை நடக்கிறது. ராஜ ராஜேஸ்வரிக்கு 18 முழம் சேலை அணிவிக்கப்படுகிறது. இந்த அம்பாளுக்கு லலிதா திரிபுர சுந்தரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இந்த கோவிலில், ஒரு மாதம் வரை திருவிழா நடக்கும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தர்பூசணி பழம் பிரசாதமாக வழங்கப்படும். தர்பூசணி பழம், புராதன காலத்தின ரத்தபீஜாசுரன் என்றே நம்பப்படுகிறது. பொளலி, மளலி, கரியங்களா உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் விளையும் தர்பூசணி மட்டுமே கோவிலில் விற்கப்படுகிறது.
விழாவுக்காக பயிர்; உள்ளூர் வாசிகள், கோவில் திருவிழாவுக்காக மட்டுமே தர்பூசணி விளைவிக்கின்றனர். இங்கு சில அதிசயங்களையும் காணலாம். வெளியூர் விவசாயிகள், விற்பனைக்கு தர்பூசணி கொண்டு வந்தால், ஒரு பழம் கூட விற்பனை ஆவதில்லை. உள்ளூர் கிராமங்களில் விளையும் தர்பூசணி, முட்டை வடிவத்தில் இருக்கும். குறிப்பாக பொளலியில் விளையும் தர்பூசணி, மனிதனின் தலை போன்றே தோற்றம் அளிக்கிறது. பல்குனி ஆற்றின் தண்ணீர், மணலில் ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கின்றனர். திருவிழா நடக்கும் நாள், தர்பூசணி விளைய தேவைப்படும் நாட்களை கணக்கிட்டு, விதை போடுகின்றனர். டிசம்பர் இறுதி முதல் ஜனவரி இடையிலான காலத்தில், விதை போட்டால் மார்ச் திருவிழாவில் விற்பனை செய்ய பழங்கள் தயாராகும். திருவிழாவை தவிர மற்ற நாட்களில் விதை போட்டால், பழமே விளைவதில்லையாம். – நமது நிருபர் –