பதிவு செய்த நாள்
16
ஏப்
2025
03:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் குஞ்சுப்பனை மகா மாரியம்மன் கோவிலில் நடந்த, குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில், மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா இம்மாதம் முதல் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. எட்டாம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. 11ம் தேதி திருவிளக்கு பூஜையும், 13ம் தேதி பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் ஆகியவற்றை எடுத்து வந்தனர். இன்று அதிகாலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றுக்கு சென்று அங்கிருந்து அம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்து, கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் தலைமை பூசாரி வெள்ளியங்கிரி, குண்டத்தைச் சுற்றி பூஜை செய்து, முதலில் குண்டத்தில் இறங்கி தீமிதித்தார். அதைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் மாவிளக்கு பூஜையும், அழகு குத்தி தேர் இழுத்தும் வந்தனர். 18ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டும், இரவு அபிஷேக பூஜையும், 22ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.