பதிவு செய்த நாள்
16
ஏப்
2025
03:04
நாமகிரிப்பேட்டை; புதையலுக்கு ஆசைப்பட்டு, பழமையான சிவன் கோவிலை தோண்டிய அர்ச்சகர், கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியில் பழமையான செவ்வந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. ‘வல்வில் ஓரி’ காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவிலில், புனரமைப்பு பணி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன், கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தரைத்தளம் சேதமடைந்தது. கோவில் செயல் அலுவலர் செந்தில்ராஜா புகாரின்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்தனர். கோவில் அர்ச்சகரான கணேஷ், 27, என்பவரிடம் விசாரித்தனர். அப்போது, கோவில் அர்த்த மண்டபத்தின் கீழே சுரங்கத்தில் புதையல் இருப்பதாக,தன் மூதாதையர் கூறியதாக, சங்கமேடு சரவணன், 59, தெரிவித்ததால், கோவிலில் கட்டுமான பணி செய்த கொத்தனார் மணிகண்டன், 30, என்பவரை கொண்டு மூவரும் கடப்பாரையால் கோவிலை இடித்தது தெரியவந்தது. சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததும், ‘தண்ணீர் குழாய் அடைத்துக்கொண்டது; அதை சரி செய்கிறோம்’ எனக்கூறி தப்பியுள்ளனர். கணேஷ், மணிகண்டனை கைது செய்து, தலைமறைவான சரவணனை போலீசார் தேடுகின்றனர்.