பதிவு செய்த நாள்
17
ஏப்
2025
11:04
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, இக்கோவிலில் எழுந்தருளி வரும் அம்மனுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.
கிழக்கு முகமாக, பக்தர்கள் கோபுர வாசலில் இருந்தே காணும் அளவிற்கு உயர்ந்த பீடத்தில், எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன், அக்னி கிரீடம், ஆயிரம் பணாமுடியுடைய அரவக்குடையும், திருவடிகளில் அணிந்தருளிய வேதங்களாகிய சிலம்பும், அங்குசம், டமருகம், கத்தி, கபாலம் என நான்கினைக்கொண்ட நான்கு திருக்கரங்களுடன், காதில் சங்கத்தோடு திருமிடற்றில் கண்டிகையும், புறங்களில் கேயூரமும், திருக்கரங்களில் கங்கணமும், திருவிரல்களில் மோதிரமும், திருப்பாதங்களில் நுாபுரமும் அணிந்து, சுகாசனத்தில், சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவில் சிறப்பு அம்சமாக, மூல விக்ரகத்தின் முன், அம்மன் சுயம்பு ஒன்று தானாக எழுந்து, தனிச்சிறப்பு பெற்று அருள்பாலித்து வரும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. அம்மன் திருமேனியுடன் கர்ப்பகிரகம், ஆதி தெய்வம் என உணர்த்தும், சுயம்பு வடிவம், கோபுர வாசலில் இருந்தே அம்மனை தரிசிக்கும் வகையில் அமைந்துள்ள, உயர்ந்த பீடம் கொண்டதாகும்.
கொடி மரம், பலி பீடம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அஸ்டதிக் பீடங்கள், தெற்கு மற்றும் வடக்கு வாசல்கள், தென்மேற்கு திசையில், விநாயகர் தனி சன்னதியில் எழுந்தருளி வருகிறார். வட மேற்கு திசையில், செல்வ முத்துக்குமரன் எழுந்தருளி வருகிறார். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, பழமையை எடுத்துக்காட்டும் சிற்பங்களுடன் கூடிய கோபுரம் அமைந்துள்ளது. அம்மனுக்கு குடையாக, அரச மரம் காணப்படுகிறது. தல விருட்சத்தை சுற்றிலும், அஷ்ட நாகர்கள் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ அனந்தன், சங்க பாலர், ஸ்ரீ பத்ம பாலன், ஸ்ரீ வாசுகி, ஸ்ரீ குளிகன், ஸ்ரீ தட்சன், ஸ்ரீ பத்மன், ஸ்ரீ கார்கோடன் என நாகராஜாக்கள் எழுந்தருளியுள்ளனர். நாக சதுர்த்தி, நாக பஞ்சமியன்று அஷ்ட நாகருக்கு, பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடக்கிறது. அரசமரத்தடியில் எழுந்தருளியுள்ள அஷ்ட நாகரை வழிபட்டால், காலசர்ப்ப தோஷம் நீக்கி, புத்திர பாக்கியம் பெறுதல், திருமண தடை நீங்குதல், நோய்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளதால், பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.