பதிவு செய்த நாள்
17
ஏப்
2025
11:04
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், வேத மந்திரங்கள் முழங்க, சீர் வரிசை சிறக்க, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று மதியம் நடந்தது. உற்சவருக்கு, பால், தயிர், பன்னீர், பழச்சாறு, தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், அம்மனுக்கும், சூலத்தேவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள், பட்டாடை, வளையல், அணிகலன்கள், இனிப்பு வகைகள், பழங்கள், திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கோவிலுக்கு, வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கின. யாக குண்டம் வளர்த்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பாரம்பரிய முறையில், உரலில் மஞ்சள் இடித்து, அம்மனுக்கு பாதத்தில் வைத்து பூஜை, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, பூ பந்து விளையாட்டு, திருமாங்கல்ய பூஜை என திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. பின்னர், வேதமந்திரங்கள், பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்களின் ‘‘ஓம் சக்தி; பராசக்தி’’ கோஷம் முழங்க, அம்மனுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தம்பதி சமேதரராய் ‘பச்சை பட்டு உடுத்தி’ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, பிரசாதம், அன்னதானம் நடந்தது. அம்மன் திருக்கல்யாணத்தின் போது, பாரம்பரிய முறைப்படி, ஏராளமான பக்தர்கள் திருமண மொய் எழுதி வழிபட்டனர்.