பதிவு செய்த நாள்
17
ஏப்
2025
12:04
சென்னை; ‘‘அனைத்து சிறப்பான ஏற்பாடுகளுடன், மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு, ‘ஜேஜே’ என்று நடக்கும்,’’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுகூறினார். ‘மதுரை சித்திரை திருவிழாவை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் உதயகுமார், எம்.எல்.ஏ., செல்லுார் ராஜூ ஆகியோர், சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது நடந்த விவாதம்: அ.தி.மு.க., – செல்லுார் ராஜூ: சித்திரை திருவிழாவின் போது, லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவர். தல்லாகுளம் – கோரிப்பாளையம் சாலையில், மேம்பால கட்டுமான பணிக்கு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.அங்கு இரும்பு கம்பிகள், கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற ஒரு மாதமாகும். சப்பரத்தில் சாமி வரும் போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவர் என்பதால், நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வைகை ஆற்றில் பாலம் கூடுதலாக கட்டப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஆற்றில் சாமி இறங்கும் இடத்தில், மண்வளம் கொள்ளை அடிக்கப்பட்டு குண்டும், குழியும் உருவாகியுள்ளது. நீர் திறக்கும் போது, அது மறைந்து விடும். சாமியை பார்க்கும் ஆர்வத்தில் பக்தர்கள் இறங்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வைகை ஆற்றை முதலில் துார்வாரி சீர்படுத்த வேண்டும். கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மதுரை மாநகராட்சி வாயிலாக, பொது மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வைக்க வேண்டும்.
அமைச்சர்: ஹிந்து அறநிலைய துறையால், 11 திருவிழாக்கள் கொண்டாட, முன்கூட்டியே ஒருங்கிணைப்பு குழு அமைக்கப் படுகிறது. வருவாய், காவல், ஹிந்து அறநிலைய துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட துறையினர், இதில் இடம் பெற்றுள்ளனர். மதுரை சித்திரை திருவிழாவிற்காக, கடந்த, 11ம் தேதி ஒருங்கிணைப்பு கூட்டமும், 12ம் தேதி அறங்காவலர் குழு கூட்டமும் நடந்துள்ளது. துறையின் ஆணையர் நேரடியாக, 13ம் தேதி ஆய்வு செய்துள்ளார். அங்குள்ள மேம்பால கட்டுமான பொருட்களை, 30ம் தேதிக்குள் அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. 2022ம் ஆண்டு நெரிசல் காரணமாக விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அதற்கு ஏழு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அதுபோல எதுவும் நடக்காமல், நடப்பாண்டு திருவிழா சிறப்பாக நடக்கும்.ரேடியோ அலைவரிசை அடையாள கார்டு வாயிலாக, ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, மதுரை திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
செல்லுார் ராஜூ: சித்திரை திருவிழாவில் சாமி இறங்கும் இடத்தில், வி.ஐ.பி.,களுக்கு சாலை அமைத்து தருகின்றனர். இதனால், பக்தர்களால் சாமி இறங்குவதை பார்க்க முடியாமல் போகிறது.
இரண்டு ஆண்டுகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். வி.ஐ.பி.,க்களுக்கு பாதை அமைக்கும் போது, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த திருவிழாவில் மது அருந்தியவர்களால் மோதல் ஏற்பட்டு கொலையும் நடந்துள்ளது. எனவே, திருவிழாவிற்காக மூன்று நாட்கள், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை அடைக்க வேண்டும்.
பக்தர்களுக்கு தனியார் வாயிலாக நீர் மோர், அன்னதானம், மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு உணவுத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. காவல் துறையிடம் தடையில்லா சான்று பெற உத்தரவு போட்டுள்ளனர். இதனால், பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்: அனைத்து சிறப்பான ஏற்பாடுகளுடன் சித்திரை திருவிழா ‘ஜேஜே’ என்று நடக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.