பதிவு செய்த நாள்
18
ஏப்
2025
12:04
விருதுநகர்; உலகம் முழுவதுமுள்ளவரலாற்று, கலாசார, இயற்கை முக்கியத்துவமுள்ளநினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுக்காக யுனெஸ்கோ நிறுவனம் ஏப்ரல் 18-ஐ உலக பாரம்பரிய தினமாக கொண்டாடுகிறது. “பேரழிவுகள், மோதல்களின் அச்சுறுத்தலில் இருந்துபாரம்பரியத்தைப் பாதுகாத்தல்” 2025க்கான இத்தினத்தின் முழக்கம். விருதுநகர் மாவட்ட கோயில்கள் பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:
செவல்பட்டி குடைவரைக் கோயில்; சிவகாசிசெவல்பட்டி அருணகிரிமலையில்வடக்கு நோக்கி ஒரு குடைவரைக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள கருவறையும் மண்டபமும் உள்ள இது சிவன் கோயில் எனினும் கருவறையில் லிங்கம் இல்லை.குடைவரையின் முகப்பில்தரங்கப் போதிகையுடன் சதுரத் துாண்கள் 4 உள்ளன. தூண் சதுரங்களில் உள்ள பதக்கங்களில் தாமரை இதழ்கள், சிங்கங்கள் உள்ளன. மண்டபத்தில் மொத்தம் ஆறு கோட்டங்கள் உள்ளன. இதில் சாய்ந்தநிலையில் அழகிய இரு துவாரபாலகர்கள், நடராசர், விநாயகர், திருமால் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.
திருச்சுழி; சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற,திருச்சுழி திருமேனிநாதர் கோயில் முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்டது. கோமாறஞ்சடையன் காலத்தில் திருநொந்தா விளக்கெரிக்க பழங்காசுகள், 19 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகள், திருநொந்தா விளக்கெரிக்க கூற்றஞ்சாற்றி, கண்டங்கிழவன் ஆகியோர் ஆடுகள் வழங்கியதையும், முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் இருப்பைக்குடியைச் சேர்ந்த தச்சன் சாத்தன், தொன்மை பெருந்தட்டான் ஆகியோர் விளக்கெரிக்க கொடை கொடுத்ததையும் தெரிவிக்கின்றன.
தொப்பலாக்கரை; அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி செல்லும் வழியில் உள்ள தொப்பலாக்கரை1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புக் கொண்டசிவன் கோயில், பெருமாள்கோயில்,விற்பொறி வீரப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளி ஆகிய தொல்லியல் சின்னங்களுடன் திகழ்கிறது. கல்வெட்டுகளில் இவ்வூர் அளற்றுநாட்டு குளத்துார் எனப்படுகிறது. பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோயில் இறைவனை திருமேற்கோயில் உய்யவந்த விண்ணகர எம்பெருமான் என்கின்றன, என்றார்.