பதிவு செய்த நாள்
19
ஏப்
2025
12:04
நாகப்பட்டினம்; வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று மாலை நடந்த புனித வெள்ளி நிகழ்ச்சிகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனை பல்வேறு தரப்பினர் நடத்தினர். அடைக்கல அன்னை அருட் சகோதரிகள், மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனை நடத்தினர். தொடர்ந்து தேவாலய கலையரங்கில் மாலை,6.30 மணிக்கு, தேவாலய பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில், 20 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு திருப்பலியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி, திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்புள்ள கொடி மரத்தின் அருகே, உற்ஸவர் கள்ளபிரான் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொடி பட்டம் சுற்றி கொண்டு வரப்பட்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. விழாவில் ஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தேரோட்டத்திற்கு பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நாட்களில் தினமும், காலையிலும் இரவிலும் சுவாமி கள்ளபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருவீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை ஏப். 22ம் தேதியும், திருத்தேரோட்டம் 26ம் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.