பதிவு செய்த நாள்
19
ஏப்
2025
02:04
கோவை; அவிநாசி சாலையிலுள்ள, தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் நேற்று மகளிர் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு கோலாகலமாக நடந்தது. தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 14 அன்று துவங்கியது. 15ல் கொடியேற்றமும் பூச்சாட்டும் நடந்தது. நேற்று முன்தினம் அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. கோவில் மண்டபத்தில், 108 மகளிர் வரிசையாக அமர்ந்து, குத்துவிளக்குகளுக்கு மங்கல பொருட்களை சமர்ப்பித்து, 108 சக்தி மந்திரங்களை போற்றி, துதித்து குங்குமார்ச்சனை செய்து வழிபட்டனர். பங்கேற்ற அனைவருக்கும், கோவில் சார்பில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திரளானோர் கலந்து கொண்டு தண்டுமாரியம்மனை வழிபட்டனர்.