பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
11:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணியை துவக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பாலாலயம் நடந்தது. இதையடுத்து, 11 லட்சம் ரூபாய் செலவில், பழுது பார்த்து புதுப்பிக்கும் திருப்பணி சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து, கடந்த 17ம் தேதி, இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. இரவு 8:00 மணிக்கு தாயார் சன்னிதியில் இருந்து ஆழ்வார், ஆச்சாரியார்கள் உடையவர் சன்னிதிக்கு புறப்பாடும், 18ம் தேதி, காலை 8:30 மணிக்கு பஞ்சகவ்ய ப்ரோக்ஷணம், ரக்ஷாபந்தனம், மஹா கும்பஸ்தானம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம், காலை 8:30 மணிக்கு கும்ப ஆராதனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தது. நேற்று, காலை 8:30 மணிக்கு ஹோமம் உள்ளிட்டவை நடந்தது தொடர்ந்து கும்ப புறப்பாடு நடந்தது. இதில், உடையவர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி சன்னிதியை வலம் வந்தார். அதை தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் மூலவர் சன்னிதியில், புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சாற்றுமறை நடந்தது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.