பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
10:04
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில் உள்ள அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ திருத்தேர் விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருமலை வையாவூரில், மிக பழமையான அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை பிரமோத்சவ விழா, விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோத்சவ விழா துவங்கியது. பின், தினமும் அம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சேஷா வாகனம், கருட சேவை உள்ளிட்டவற்றில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மலையில் இருந்து பிரசன்ன வெங்கடேச பெருமாள் கீழே கொண்டுவரப்பட்டார். பின், பாரம்பரிய முறைப்படி, வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். நேற்று காலை வரை, திருமலை வையாவூரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. வீடுதோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று, போர்வை களைதல் தீர்த்தவாரி மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது.