பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
12:04
நரிக்குடி; விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மறையூரில் 350 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் அன்னச்சத்திரம் சிதிலமடைந்து உள்ளதுடன் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. மாநில அரசு விரைவில் புனரமைத்து புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும்.
17ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சியில் கோயில்கள், வெளியூர்களுக்கு மக்கள் நடந்தே சென்றனர். மக்கள் தங்கி ஓய்வெடுத்து, பசியாறி மீண்டும் களைப்பின்றி நடந்து செல்ல முக்கிய இடங்களில் அன்னசத்திரம் கட்ட ராணி மங்கம்மாள் நடவடிக்கை எடுத்தார். விருதுநகர் மாவட்ட மேற்குப்பகுதி சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் தேவிபட்டணம், ராமநாதபுரம், ராமேஸ்வரம் சென்று வந்தனர். இதற்காக நரிக்குடி மறையூரில் அன்னச்சத்திரம் அமைக்கப்பட்டது. இச்சத்திரத்தின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. சதுர வடிவம் கொண்டது. நேருக்கு நேராக 4 நுழைவு வாயில்கள், 8 ஜன்னல்கள் உள்ளன. தாழ்வாரத்தில் சிற்பங்கள் உள்ள 7 தூண்கள், வரிசைக்கு 7 என 6 வரிசைக்கு 42 தூண்கள் என மொத்தம் 49 தூண்கள் உள்ளன. தங்குபவர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க, தெற்கில் ஒரு அறை, தென்மேற்கு மூலையில் ஒரு அறை உள்ளன. சத்திர பொறுப்பாளருக்கு தனி அறை உள்ளது. தூண்களில் எதிர் எதிரே வணங்கிய நிலையில் 2 சிற்பங்கள் உள்ளன.
தாழ்வாரத்தில் உள்ள துாண்களில் நின்ற நிலையில் திருமாலும், பூக்களும், ஸ்வஸ்திக், அன்னம், வில்லேந்திய ராமரும், லிங்கத்தின் இருபுறம் நாகம் போன்ற பல புடைப்புச்சிற்பங்களும் உள்ளன. மத்தியில் வெளிச்சத்திற்காகவும், மழை நீர் கிடைக்கவும் முற்றம் உள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சியாக இருந்துள்ளது. மக்களுக்கு பசி போக்க அன்ன தானம் வழங்கப்பட்டது. முற்றத்தின் கீழ் சுரங்கப்பாதை உள்ளதாக தகவல் உள்ளது. இச்சத்திரத்தை சீரமைத்து புனரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாண்டி, மறையூர்: பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் விளங்கிய இச்சத்திரம் 350 ஆண்டுகள் பழமையானவை. 100 ஆண்டுகளுக்கு முன் பள்ளியாக செயல்பட்டது. 13 ஏக்கர் பரப்பில் இருந்தது. இந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா நிலங்களாக மாறியது. தற்போது ஒரு ஏக்கரில் மட்டுமே கட்டடம் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. இங்கு சமூக விரோத செயல்களும் நடக்கிறது. கால்நடைகளை அடைத்து வருகின்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் சட்டசபையில் இதை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். இது சிவகங்கை சமஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதனை புனரமைத்து, புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார்.