பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
12:04
திருப்பூர்; சித்திரை திருவோண நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் மஹா அபிஷேகம் நடந்தது. சிவாலயங்களில் உள்ள ஸ்ரீநடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறுமுறை அபிஷேகம் நடக்கிறது. சித்திரை – திருவோணம், ஆனி – உத்திரம், மார்கழி –திருவாதிரை நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் என, ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரை திருவோண நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜப்பெருமான் – சிவகாமியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேவாரம், திருவாசக பதிகங்கள் பாராயணம் செய்து வழிபட்டனர். சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜப் பெருமான் – சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 32 வகை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது; பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.