பதிவு செய்த நாள்
23
ஏப்
2025
10:04
திருவள்ளூர்; பஞ்ச பாஸ்கர ஸ்தலங்கள் ஐந்தில், சென்னை செங்குன்றம் அருகே திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் முதலாவதாக உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவில், 1,000 ஆண்டு பழமையானது. கோவிலுக்கு சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் காலப்போக்கில் சுருங்கி விட்டது. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணமாக கூறப்பட்டது.
சமீபத்தில் கோவிலுக்க சொந்தமான 31 சென்ட் நிலத்தை சிலர் போலி பட்டா தயாரித்து அதை வேறு ஒருவருக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து அதே கிராமத்தை சேர்ந்த இந்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.நாகபூஷணம், கோவில் நிர்வாகத்திற்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் பல முறை புகார் அளித்தார். அதன்படி, புகாரில் குறிப்பிட்ட இடம், கோவிலுக்கு சொந்தமானது என கடந்தாண்டு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர், பொன்னேரி தாசில்தார் ஆகியோர் தணிக்கை செய்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், ‘‘போலி பட்டா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,’’ என நாகபூஷணம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: பஞ்ச பாஸ்கர ஸ்தலமான இக்கோவிலில் மட்டுமே திருவோடு மரம் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக இருந்த பல ஏக்கர் நிலம், ஏற்கனவே பறிபோயுள்ளது. தற்போது கோவில் எதிரே உள்ள 31 சென்ட் இடம் போலி பட்டா மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தும். அதன் மீது, ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இவ்விஷயத்தில் திருவள்ளுர் மாவட்ட கலெக்டரும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் போர்கால அடிப்படையில் செயல்பட்டு கோவில் இடங்களை மீட்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவில் கோபுரம் முன் தோண்டிய போது, புதையல் கிடைத்தது. அதைப்பற்றி வெளியே யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்துவிட்டனர். அதுகுறித்தும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மெத்தனமாக செயல்படுவதே கோவில் சொத்து கபளீகரம் ஆவதற்கு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.