பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
11:04
காஞ்சிபுரம்; ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் மாவட்டம், சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்துள்ளனர். அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய, சுவாமிகள், காஞ்சி காமாட்சியம்மனை பிரார்த்திக்கிறார். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் அருளாணைப்படி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் தெரிவித்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் நுழைவாயிலில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபம் ஏற்றி அஞ்சலி; ஜம்மு- – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டம், சுற்றுலா தலத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும், காஞ்சிபுரம் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி 2வது வார்டில், காஞ்சி மாநகர முன்னாள் தலைவர் ஜீவானந்தம் தலைமையில், பா.ஜ., வினர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர், தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.