ஒருவன் இன்னொருவனைப் பார்த்து, செத்து செத்து விளையாடலாமா? என்று கேட்டால், அதில் வேடிக்கைக்கு ஒன்றுமில்லை. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தினமும் செத்து தான் பிழைக்கிறான். இரவில் தூங்கி மறுநாள் எழுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் எங்கிருந்தோம்? செத்தவன் எப்படி உணர்ச்சியற்றுக் கிடப்பானோ, அதுபோல் தானே கிடந்தோம்! உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்கிறார் வள்ளுவர். இந்த இடைப்பட்ட நேரத்தில், நம்மைப் பாதுகாப்பவன் கடவுள். அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதத்தில் தினமும் இரவு தூங்கப்போகும் முன், அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். கோவிந்தா, நாராயணா, நமசிவாய, வெற்றி வடிவேலா, என் குலதெய்வம் கருப்பசுவாமியே என்று உங்களுக்கு எந்த தெய்வத்தின் மீது பிரியமோ, அந்த நாமத்தைச் சொல்லுங்கள். தினமும் செத்து பிழைக்க உதவும் இறைவனுக்கு செலுத்தும் நன்றிக்கடன் இதுதான்.