பதிவு செய்த நாள்
29
ஏப்
2025
03:04
கூடலுார்; மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடியில் இன்று நடக்க இருந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழக கேரள எல்லை கூடலுார் விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் தமிழக வனப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு மே 12ல் நடைபெற உள்ள விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. விழா தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர் தலைமையான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் தேக்கடியில் நடந்தது.
அனுமதி மறுப்பு: கோயிலில் விழா நடப்பதற்கு முன்பு அடிவாரப் பகுதியில் உள்ள லோயர்கேம்ப் பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இன்று மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கொடியேற்ற விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தங்களுக்கு உரிமை உள்ளது என கூடலுார் கண்ணகி தேவி அறக்கட்டளை தலைவர் மகேந்திரன், செயலாளர் லலிதா, பொருளாளர் குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் மூங்கில் மரத்துடன் பளியன்குடிக்கு வந்தனர். அறக்கட்டளையினருக்குள் குளறுபடி இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் கொடியேற்ற விழா நடத்த அனுமதி மறுத்தது. இதற்காக உத்தமபாளையம் டி.எஸ்.பி. வெங்கடேசன், தாசில்தார் கண்ணன், ரேஞ்சர் முரளிதரன் ஆகியோர் அப்பகுதியில் முகாமிட்டனர். பளியன்குடிக்கு செல்லும் கேட் பூட்டப்பட்டு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அறக்கட்டளையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடியேற்ற விழா குறித்து மே 2ல் அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூடலுார் கண்ணகி தேவி அறக்கட்டளையினர் தாங்கள் கொண்டு வந்த பொங்கல் பிரசாதத்தை வழங்கிவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பல ஆண்டுகளாக மூங்கில் மரம் கொண்டு வந்து கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடத்திய எங்களுக்கு இதற்கான அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கம்பத்தில் கொடியேற்றம்: பளியன்குடியில் அனுமதி மறுக்கப்பட்டதால் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கம்பத்தில் உள்ள அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.