பதிவு செய்த நாள்
02
மே
2025
02:05
காரமடை ; வைணவ ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீ ராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான ஸ்ரீ ராமானுஜருக்கு உடையவர், எதிராஜர், பாஷ்யகாரர் என இவருக்கு திருநாமங்களும் உண்டு. குரு பக்திக்கு தலையாய இடம் தந்த இவரின் 1008 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா அனைத்து வைணவ திருத்தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவருக்கு சிறப்பு வைபவங்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடந்த வைபவத்தில் அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கால சந்தி பூஜை முடிந்தவுடன் உற்சவ மூர்த்தி ராமானுஜர், உடையவர் சன்னதிக்கு எழுந்தருளினார்.அங்கு விஷ்வக்ஸேனர் ஆராதனம் புண்யா வசனம் கலச ஆவாஹனம் முடிந்து ஸ்தபன திருமஞ்சனம் மூலவர் ராமானுஜர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் மேள தாளம் முழங்க ரங்க மண்டபத்தில் ஸ்ரீ ரங்கநாதர் முன்பு எழுந்தருளினார். மாலை பரிவட்ட சடாரி மரியாதை ரங்கநாதரிடம் இருந்து அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்தலத்தார்கள் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில் ராமானுஜர் நூற்று அந்தாதி பாசுரங்களை சேவித்தனர். தொடர்ந்து சடாரி மரியாதை பெற்றுக் கொண்டு திருக்கோவில் வலம் வந்து மீண்டும் உடையவர் சன்னதி அடைந்தார். உச்சகால பூஜை சாற்றுமுறை சேவிக்கப்பட்டு அலங்கார தீப ஆராதனை நடந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதார்ரர்கள், அரங்காவலர்கள், திருக்கோவில் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.