பதிவு செய்த நாள்
13
டிச
2012
10:12
மதுரை: மதுரை ஆதீன மடத்தில், உதவியாளராக சேர்ந்துள்ள தம்பிரானின் பெயரை மாற்றி, இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான சடங்குகள் துவங்கின. இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்து சர்ச்சையில் சிக்கிய மதுரை ஆதீனம், யாரும் எதிர்பாராத வகையில், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தம்பிரான் திருச்சிற்றம்பலத்தை, உதவியாளராக நியமித்துக் கொண்டார். இதற்காக, மடத்தில் முதன்முதலாக "தம்பிரான் என்ற பதவியையும் உருவாக்கினார். இவரை இளைய ஆதீனமாக நியமிப்பதற்கான நடவடிக்கைகளில், மதுரை ஆதீனம் ஈடுபட்டுள்ளார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: மடத்தின் சம்பிரதாய பூஜைகள் அனைத்திலும் திருச்சிற்றம்பலம் உதவியாக இருக்கிறார். அவருக்கு, பல்வேறு தீட்சைகள் வழங்குவதற்கான சடங்குகள் துவங்கியுள்ளன. முடிஇறக்கி, மரபு ரீதியான ஆதீன உடையை அவர் அணிவார். பெயரும் மாற்றப்படும். அப்போதைக்கு என்ன பெயர் தோன்றுகிறதோ, அதை சூட்டுவேன். இவ்வாறு கூறிய ஆதீனத்திடம், "இளைய ஆதீனமாக வருபவருக்கு தானே, இது போன்ற சடங்குகள் செய்யப்படுவது வழக்கம்? எனக் கேட்டதற்கு, ""தம்பிரானாக இருப்பவருக்கும், இது பொருந்தும், என்றார்.