பதிவு செய்த நாள்
13
டிச
2012
11:12
திருவெண்ணெய்நல்லூர்: உலகம் அழியப்போவதாக பரவிய வதந்தியால், திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம பெண்கள், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், அரசூர் காலனியில், வரும், 21ம் தேதி, உலகின் ஒரு பகுதி அழியப் போவதாக, வதந்தி பரவியது. "இதற்கு பரிகாரமாக, காலை முதல், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டின் வாசலில், காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்ற தகவல் பரவியது. இதையடுத்து, அரசூரிலுள்ள பலர் வீட்டு வாசலிலும் விளக்குகளை ஏற்றி, அனையாமல் பார்த்துக் கொண்டனர்.
சூரியனை மறைத்த கரும்புள்ளி: சேலத்தில், சீனா தயாரிப்பு மொபைல்போன் மூலம் படம் பிடிக்கப்பட்ட சூரியனுக்கு மத்தியில், கரும்புள்ளி காட்சியளித்தது. "இது, உலகம் அழிவதற்கான அறிகுறி என, பொதுமக்கள் இடையே வதந்தி பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களாகவே, "உலகம் அழியப் போகிறது என்ற புரளி, பரவலாக உள்ளது. வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், ஜோதிட கணிப்பாளர்கள் பலர், "இது, வீண் வதந்தி என்று கூறினாலும், பல்வேறு தரப்பினர், அதை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை. வெளிநாடுகளில் மட்டும் அல்லாமல், சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட, மாயன் காலண்டரை மேற்கொள் காட்டி, டிச., 21 ம் தேதி, உலகத்தின் கதை முடியப் போகிறது என, பேசி வருகின்றனர்.இந்த சூழ்நிலையில், நேற்று வானில், சூரியனை மறைத்த கரும்புள்ளியால், சேலம் மாநகர மக்கள் இடையே, பரபரப்பு ஏற்பட்டது. சூரியன் வெடித்து சிதறி, உலகம் அழியும் என்று கருதிய சிலர், நேற்று காலை, 11:00 மணியில் இருந்து, தங்கள் மொபைல் போன் மூலம், சூரியனை படம் பிடித்துள்ளனர். முன்னணி நிறுவனங்களின், மொபைல் போன்களில், சூரியன் படம் பதிவானது. ஆனால், சீன தயாரிப்பு மொபைல் போன்களில், சூரியனுக்கு மத்தியில், சிறிய கரும்புள்ளி ஒன்று தோன்றிய காட்சி பதிவானது. மதியம், 2:00 மணிக்கு மேல், சூரியனை சுற்றியிருந்த கரும்புள்ளி, மிகவும் பெரிதாக காட்சியளித்தது.மொபைல்போனில் படம் பிடித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். "இது உலகம் அழியப் போவதற்கான அறிகுறி என, சேலம் மாநகர மக்கள் இடையே வதந்தி பரவியது.சென்னை, வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "இங்கு, அதுப்போல் எதுவும் தெரியவில்லை; ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உள்ள, கோள்கள் தொடர்பான ஆய்வு மையத்தை தொடர்பு கொண்டால் மட்டுமே, முழு விவரம் அறியலாம் என்றனர்.