பதிவு செய்த நாள்
13
டிச
2012
11:12
சென்னை: திருமலை - திருப்பதியில் நடக்கும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வழக்கமாக இயக்கப்படும் ரயில், விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் முன்பதிவு, முடிவுக்கு வந்து விட்ட நிலையில், 25 சிறப்பு பஸ்களை இயக்க, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதியில், டிச., 24ம் தேதி நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், கூடுதலாக, 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. முன்பதிவுகளுக்கு ஏற்ப, இந்த பஸ்களின் எண்ணிக்கை, 50 ஆக அதிகரிக்கவும், விரைவு போக்குவரத்துக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதிக்கு செல்லும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்து விட்டது. அதே போல், தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து, திருப்பதிக்கு இயக்கப்படும், 38 பஸ்களின், முன்பதிவும் முடிந்துள்ளது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு, விரைவுப் போக்குவரத்துக் கழகம், டிச., 20 முதல், 27 வரை, திருப்பதிக்கு, கூடுதலாக, 25 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து ஏழு பஸ்களும், சேலத்திலிருந்து ஐந்து, திருச்சியிலிருந்து நான்கு, கோவையிலிருந்து மூன்று, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், விழுப்புரம், வேலூர் நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு, நாளை துவங்கும் என, விரைவுப் போக்குவரத்துக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
100 சிறப்பு பஸ்: விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை, விழுப்புரம், கும்பகோணம், சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட கோட்டங்களுக்கு உட்பட்ட, முக்கிய நகரங்களில் இருந்து, திருப்பதிக்கு, 100 சிறப்பு பஸ்களை இயக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.