கன்னியாகுமரி கோயிலில் 9 லட்சம் ரூபாய் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2012 11:12
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை மற்றும் நேர்ச்சை செலுத்துவதற்காக கோயிலில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் சுவாமிநாதன், முதுநிலை கண்காணிப்பாளர் இங்கர்சால், நாகர்கோவில் தேவசம்போர்டு முதுநிலை கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், ஆய்வாளர் சாரதா, கோயில் மேலாளர் சோணாசலம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் குமரி விவேகானந்தா கேந்திரா பள்ளி மாணவர்கள், கொட்டாரம் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 878 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் 12 கிராம் தங்கம், 17 கிராம் வெள்ளி, அமெரிக்க டாலர்-2, ரியால்-1, மலேசியன் ரிங்கெட் 38 போன்றவையும் கிடைத்துள்ளது.