உலக நன்மை வேண்டி அகத்தீஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு மகா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2025 02:05
காரைக்கால்; உலக நன்மை வேண்டி பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சியையொட்டி, குரு பகவானுக்கு மகா யாகம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் குருபகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார். விசேஷமாக ரிஷப வாகனத்தில் அமர்ந்த காலத்தில் பன்னிரண்டு ராசி சக்கரங்களோடு மேலே விநாயகர் வலது புறத்தில் அகஸ்தியர் இடதுபுறத்தில் கோரக்கர் சித்தர் ஆகியோரோடு ராசி மண்டல குரு தட்சிணாமூர்த்தியாக தெற்கு முகம் நோக்கி அருள் பாலித்து வருகிறார். குருபெயர்ச்சியையொட்டி, இக்கோயிலில், உலக நன்மை வேண்டி நேற்று மகா யாகம் நடந்தது. ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியானதையடுத்து, 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்மை பெற பிரார்த்தனை நடந்தது. மழை வேண்டிய மகா சங்கல்பத்துடன் ஜபம் நடைபெற்றது. பின் மகா பூர்ணாஹுதி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, 27வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அகில இந்திய ஆசிசைவ சிவாச்சாரியர் சேவா சங்க துணைத் தலைவர் சர்வ சாதகம் திருநள்ளாறு ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் குருக்கள்கள் பிரம்மஸ்ரீ ராஜா குருக்கள். பிரம்மஸ்ரீ குமார் குருக்கள்.ஆச்சார்ய சாதகமாக சிவராம மூர்த்தி சிவாச்சாரியார் சக்தி மணிகண்ட சிவாச்சாரியார் ஆகியோர் யாகம் நடத்தினர். 108 வகையான மூலிகைப் பொருட்கள், நவதானியங்களை கொண்டு இந்த மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக மங்கள வாத்தியத்துடன் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து குரு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.