பதிவு செய்த நாள்
13
மே
2025
11:05
கூடலுார்; தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடந்தது. பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து மாதந்தோறும் வழிபட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., தூரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., தெள்ளுக்குடி வழியாக 3.5 கி.மீ., தூர நடைபாதையும் உள்ளது. கண்ணகி மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். துர்க்கை அம்மன், சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்ணகியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள் மற்றும் பெண்களுக்கு வளையல், அட்சயப் பாத்திரம் மூலம் அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.
கூடுதல் பக்தர்கள்: வழக்கத்தை விட இந்த ஆண்டு குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக ஜீப் மூலமும், பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக நடந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களை அழைத்துச் செல்ல 500க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகம் திரண்டதால் குமுளியில் ஜீப் ஏறும் இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கினர். கோயில் வளாகம், குமுளியில் சித்தா மற்றும் பொது மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் வளாகத்தில் உள்ள கண்ணகி அம்மன் துர்க்கை அம்மன், சிவன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பின் தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக பாதை சீரமைப்பது குறித்து வனத்துறையினருடன் ஆலோசனை செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும் போது: சேர மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயிலை முழுவதும் சீரமைக்க நடவடிக்கை எடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் என்ற நிலையை மாற்றி, பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து மாதம்தோறும் பவுர்ணமி தினத்தன்று இக்கோயிலில் வழிபட தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 25 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். தேனி கலெக்டர் ரஞ்சீத்சிங், இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி, இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் கார்த்திக், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், எஸ்.பி., சிவப்பிரசாத், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் உள்ளிட்ட தமிழக கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தரமற்ற உணவா ?; வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விழா நடத்தப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 25 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6 டிராக்டரில் உணவு கொண்டு வரப்பட்டது. அதில் சில பாத்திரங்களில் கொண்டுவரப்பட்ட உணவு கெட்டுவிட்டதாக பக்தர்கள் சாப்பிடாமல் கீழே கொட்டி விட்டு சென்றனர். அதைக் கண்டறிந்து அந்த உணவு வைத்திருந்த பாத்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை சார்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.