மானாமதுரை சித்திரை திருவிழா; தசாவதாரத்திற்காக கருட வாகனத்தில் எழுந்தருளிய வீர அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 04:05
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் தசாவதாரம் நிகழ்ச்சிக்காக வீர அழகர் கருட வாகனத்தில் கோர்ட்டார் மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த 12ம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று இரவு வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சியும், பின்னர் வைகை ஆற்றில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மதங்களை சேர்ந்த ஏராளமானோர் சைவம் மற்றும் அசைவ உணவுகளை கொண்டு வந்து பவுர்ணமி நிலவொளியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். இன்று தசாவதாரம் நிகழ்ச்சிக்காக வீர அழகர் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் சிவகங்கை ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கோர்ட்டார் மண்டகப்படிக்கு எழுந்தருளி அங்கு ராமர், கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 17ம் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.