பதிவு செய்த நாள்
14
மே
2025
04:05
கோவை; அலங்காரமாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், சக்தி கரக ஊர்வலமும், மங்கலவாத்தியங்கள் முழங்க, விமரிசையாக நடந்தது. ராமநாதபுரம் ஒலம்பஸ்ஸில் அமைந்துள்ளது, அலங்காரமாரியம்மன் கோவில். இக்கோவில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி இன்று நடந்தது. நஞ்சுண்டாபுரத்திலுள்ள ஸ்ரீ சக்திமுனீஸ்வரர் கன்னிமார் திருக்கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சக்திகரகங்கள், அக்னிச்சட்டி, தீர்த்தக்குடம், பால்குடம், அலகு குத்திய நிலையிலும், அக்னிச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. நஞ்சுண்டாபுரம் சாலை வழியாக, கோவை திருச்சி சாலையை அடைந்தது. அங்கிருந்து ராமநாதபுரம் ஒலம்பஸ்சை அடைந்தது. வழிநெடுக உடுக்கை அடித்து அம்மனை உச்சாடனம் செய்யும் நிகழ்வுகளும், உடுக்கைப்பாடல்களும் பாடப்பட்டன. பக்தர் ஒருவர் ஐந்து அக்னிச்சட்டிகளை, இரும்பு வளையத்தினுள் வைத்து ஏந்தி சென்றார். இன்னும் சில பக்தர்கள், 12 அடி நீளத்துக்கு அலகு குத்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழிநெடுக குடங்களில் தண்ணீர் ஊற்றி, சக்திகரக ஊர்வலத்தை மக்கள் வரவேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.