பதிவு செய்த நாள்
18
மே
2025
01:05
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், குமரி மேடு எனப்படும் குமண மேடு பகுதியில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய, சிவாலயம் மற்றும் வீரராகவ பெருமாள் கோவில் இருந்துள்ளது. தற்போது, கோவில் அழிந்து, அதன் தொல்லியல் சான்றுகள் மட்டுமே மிஞ்சியுள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, மத்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி மற்றும் கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், அருள்செல்வன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:
அமராவதி ஆற்றங்கரை வழி நாகரீகம், தொல்லியல் சான்றுகள், குமண மன்னன் ஆண்டதற்கான சான்றுகள், சமண படுகைகள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் மற்றும் சங்க இலக்கிய பாடல்கள் வாயிலாகவும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் தொடர்ந்து கள ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக, கரைவழி நாடு என்றும் ராஜராஜ வழி நாடு என்று, கொழுமம், குமரலிங்கம் கல்லாபுரம் பகுதியை அழைத்துள்ளனர். இதற்கு, கரைவழியில் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான, சிதிலமடைந்த கற்சிலைகள், தீப கம்பங்கள், அடிப்பகுதி கற்சிற்பங்கள் என தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
தற்போது, குமரலிங்கம் கிராமத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள, குமரித்திட்டு பகுதியில், நான்கு அடிக்கு, ஐந்தடி அகலம் கொண்ட பெரிய கற்பாறையில், ஒன்பது துளைகள், ஒரே மாதிரி அளவில் இருப்பதும், அதன் நடுவில் இருக்கும் துளை ஓரளவு பெரியதாக இருப்பதையும் காணும் போது, 15 அடிக்கும் மேற்பட்ட தூலகம்பம் அல்லது தீபகம்பம் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
பெரிய அளவில் வளர்ந்துள்ள அரச மரத்தின் கீழ், ஐந்தடிக்கு ஐந்தடி அளவில் ஆவுடையார் உடன் கூடிய சிவலிங்கம் மக்கள் வழிபாட்டிலும் இருந்துள்ளது.
மரம் வளர்ந்த போது, சிவலிங்கம் அரசமரத்திற்குள் மறைந்து விட்டது. 15 ஆண்டுக்கு முன் வரை வெளியில் தெரிந்த நிலையில் இருந்துள்ளது. தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால், மேலும் ஏராளமான சான்றுகள் கிடைக்கும்.
இவ்வாறு, கூறினார்.