பதிவு செய்த நாள்
18
மே
2025
01:05
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில்ஆண்டுதோறும்சித்திரை அல்லது வைகாசியில், திருவூலம் உத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, 125ம் ஆண்டுக்கான உத்சவ விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது.
மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி பல்லக்கில் அமர்ந்து பல்வேறு கிராமங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இளையனார்வேலுாரில் புறப்பாடு துவங்கி, வள்ளிமேடு, தம்மனுார், புளியம்பாக்கம், சங்கராபுரம், பழையசீவரம் ஆகிய கிராமங்கள் வழியாக, நேற்று, காலை 10:00 மணிக்கு உள்ளாவூர் வந்தடைந்தார். முதன்முறையாக உள்ளாவூர் கிராமத்திற்குள் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
அங்கு, சுவாமிக்கு மனோரஞ்சித மலர் சூடி பால், தயிர், சந்தனம், தேன் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. அப்போது 5 கிலோ கற்பூரம் கட்டியால் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் மேலச்சேரி, மணப்பாக்கம் வழியாக சென்று, இன்று அதிகாலை, பாலுாரில் உள்ள முருகன் சுவாமிக்கான தனி மண்டப சன்னிதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.