பதிவு செய்த நாள்
21
மே
2025
10:05
ஆவடி; ஆவடி, கோவர்தனகிரி நகர் அருகே கலைஞர் நகர் ஒன்றாவது தெருவில், முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை முதல் ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதேபோல், நேற்று இரவு 7:20 மணியளவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. அப்போது முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள கோபுர கலசத்தின் மீது பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதில், கலசத்தில் இருந்து தீப்பொறி எழுந்து, கரும் புகை அப்பகுதியை சூழ்ந்தது. கோவில் கோபுரம், கலசம் உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்தது. மேலும், கோவிலை ஒட்டி உள்ள ஐந்து வீடுகளில் ‘டிவி, பிரிஜ், வாஷிங் மிஷின், மின்விசிறி’ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் குடியிருப்பு வாசிகள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். கோவில் கோபுரம் மற்றும் கலசம் உ ட்பட, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோவில் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், அருகில் இருந்த வீடுகளில், 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.