பதிவு செய்த நாள்
21
மே
2025
10:05
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வழிபட வசதியாக, பேட்டரி கார் சேவையை, மே 18ம் தேதி, தஞ்சாவூர் தி.மு.க., -– எம்.பி., முரசொலி துவக்கி வைத்தார். சிட்டி யூனியன் வங்கி மற்றும் தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து முதற்கட்டமாக ஒரு பேட்டரி காரை சுற்றுலா துறை அலுவலர் சங்கரிடம் வழங்கின. மேலும், இரு பேட்டரி கார்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பேட்டரி காரை கோவில் வளாகத்தில் இயக்க, இந்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்கப்படாத சூழலில், எம்.பி.,யால் துவங்கப்பட்ட பேட்டரி கார் சேவை அன்றைய தினமே முடங்கியது.
பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், பேட்டரி கார் குறித்து அறிந்து, ஏமாற்றத்துடன் சென்றனர். கடும் அதிருப்தியடைந்துள்ள முரசொலி எம்.பி., மத்திய அரசிடம் சேவையை துவங்க அனுமதி கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தொல்லியல் துறை அலுவலர்கள் கூறியதாவது: பேட்டரி கார் சேவை குறித்து, முறையான எந்த அனுமதியும் வாங்கவில்லை. எந்த அடிப்படையில் சேவையை துவங்கினர் என தெரியவில்லை. தற்போது தான் அனுமதிக்கான கடிதம் கொடுத்து, பேட்டரி கார் இயக்குவதற்கான வேலைகளை சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பினர் செய்து வருகின்றனர். மேலிடத்தில் இருந்து எங்களுக்கு எவ்வித அனுமதி கடிதமும் வரவில்லை. அனுமதி கடிதம் கிடைத்த பின் பேட்டரி கார் சேவை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.