பதிவு செய்த நாள்
22
மே
2025
03:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2007ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. திருப்பணிக்காக, கடந்த ஆண்டு அக்., மாதம், 21ம் தேதி, கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து, தொல்லியல் துறையின், ரசாயண பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறாமால் புதுப்பிக்கப்பட்டது. தற்போது உட்புற சுவர் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறையின் ரசாயண பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் சீரமைப்பு பணிக்கு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில், ரசாயண தன்மை இல்லாத நுரைப்பு எண்ணெய் கலந்து, அதை நுரைக்க வைத்து, இலகுவான பிரஷ் வாயிலாக துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக கோவில் கோபுரம் சுத்தம் செய்யப்பட்டது. தற்போது உட்புற சுவர் சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெறும் நிலையில், அடுத்து வெளிப்புற சுவர் சுத்தப்படுத்தும் பணி துவக்கப்பட உள்ளது. தற்போது, கோவில் கோபுரம் மற்றும் உட்புற சுவர் என, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வெளிப்புற சுவர், 20 சதவீத பணியை மூன்று மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘‘தொல்லியல் துறை சார்பில், வைகுண்ட பெருமாள் கோவில் முழுதும் மேற்கொள்ள வேண்டிய திருப்பணியை முடித்தபின், கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்,’’ என்றார்.