பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப் காரில் ஒத்திகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 10:05
பழநி; பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப்காரில் ஆபத்து நேரத்தில் பக்தர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகை நடத்தினர்.
பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, அரக்கோணம் பகுதியில் இருந்து வருகை புரிந்தனர். துணை கமாண்டண்ட் சுதாகர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் பழநி கோயில் ரோப் கார் நிலையத்திற்கு பேரிடர் மீட்பு, போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வருகை புரிந்தனர். கோயில் சார்பில் பராமரிப்பு நேரமான மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் சென்றுவர இடையூறு ஏற்படவில்லை. ரோப் கார் பெட்டிகளில் பணியாளர்கள் இரண்டு நபர்களை அமர்த்தி பாதி வழியில் அந்தரத்தில் நிறுத்தினர். அதன் பின் பேரிடர் ஒத்திகை துவங்கியது. திண்டுக்கல் உதவி மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மீட்பு படையினர் ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அதன் பின் அந்தரத்தில் ரோப்கார் பெட்டியில் சிக்கி இருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இதில் நவீன உபகரணங்களை பயன்படுத்தினர். மேலும் தொலைத் தொடர்பு வசதியை தனியாக ஏற்படுத்த சாட்டிலைட் தொடர்பு கொள்ளும் வகையில் ஆண்டனா அமைக்கப்பட்டு வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் தகவல்கள் பரிமாறப்பட்டன. இதில் உதவி கலெக்டர் சுகுமார், தாசில்தார் பிரசன்னா, கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் உமாசெல்வி, தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காளிதாஸ், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.