பதிவு செய்த நாள்
24
மே
2025
12:05
ராமேஸ்வரம்; இலங்கை தலைமன்னாரில் இருந்து ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தை காண இலங்கை அரசு சுற்றுலா படகு சவாரி துவக்கிட உள்ளது. இலங்கையில் ராவணன் சிறை வைத்த சீதையை மீட்க, ஸ்ரீ ராமர் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்து ராவணனிடம் போரிட்டு வென்று சீதையை மீட்டு தனுஷ்கோடி வந்ததாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீ ராமர் அமைத்த பாலம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை (40 கி.மீ.,) கடலுக்குள் புதைந்து ஆங்காங்கே மணல் தீடைகளாக காணப்படுகிறது.
இந்த மணல் தீடைகள் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, தரிசிக்கவும் இலங்கை தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்கிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 10 சுற்றுலா படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதில் 10 பேர் பயணிக்க கூடிய வகையில் இருக்க வசதி உள்ளது. இந்த ராமர் பாலம் சுற்றுலா படகு திட்டத்திற்கு, இலங்கை கடற்படை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டு உள்ளது. இதில் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் படகில் வைக்கவும், சுற்றுலா படகுகள் 2 முதல் 3 கி.மீ., மேல் செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதித்துள்ளனர். இந்த சுற்றுலா படகு சவாரி ஜூன் 7 க்குள் துவக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.