நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான குமாரகோயிலுக்கு பக்தர்கள் காவடி ஏந்தி வந்தனர். திருச்செந்தூரில் வைகாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வருவது போல குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலான குமார கோயிலுக்கு கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் காவடி எடுத்து வருகின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் கடைசி வெள்ளிக்கிழமையன்று காவடி எடுத்து வருகின்றனர். நேற்று மலர்காவடி, வேல்காவடி, பறக்கும் காவடி என பல்வேறு காவடிகளை மேளதாளத்துடன் எடுத்து பக்தர்கள் மதியம் குமார கோயிலுக்கு வந்தனர். வேல்முருகா என்ற கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட யானையுடன் இவர்கள் ஊர்வலமாக வந்தனர், மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக காவடியில் கொண்டு வரப்பட்ட புனிதநீர், பன்னீர், சந்தனம் போன்றவை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தக்கலை போலீஸ் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவற்றில் இருந்தும் ஊழியர்கள் காவடி எடுத்து குமாரகோயிலுக்கு வந்தனர். இது திருவிதாங்கூர் மன்னர் காலத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும்.