பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
திருச்சி: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கவுள்ள, ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு, 22 அரசுத்துறைகள், தங்களது துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக, அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்தனர்.உலக பிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் திறப்பு, வரும், 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கு நடக்கிறது. கடந்தாண்டு, 3 லட்ச ரூபாய் பக்தர்கள் வருகை தந்த நிலையில், நடப்பாண்டு, 4 லட்சம் பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை, கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் ஆனந்தன், சிவபதி, கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், எம்.எல்.ஏ., மனோகரன், துணைமேயர் ஆசிக் மீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் அறிவுரை: கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்தன், சிவபதி பேசியபோது, ""ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும், பிரசித்திப்பெற்ற இவ்விழாவை, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, பக்தர்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தரவேண்டும், என்று கேட்டுக்கொண்டனர்.மாநகராட்சி, போலீஸ், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, ரயில்வே, அறநிலையத்துறை, தொலைபேசி, தீயணைப்புத்துறை உள்ளிட்ட, 22 துறைகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை சார்பிலும் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, விரிவாக எடுத்துரைத்தனர். பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தரும்படி அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
சிறப்பு ஏற்பாடுகள்: கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது:விழாவை சிறப்பாக நடந்த, இதற்கு முன்னர், 2 ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. 51 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும், 21 இடத்தில் நிரந்தர கழிவறையும், 4 இடத்தில், தற்காலிக கழிவறையும், 5 இடத்தில், நடமாடும் கழிவறையும், 9 இடத்தில், பெண்களுக்கான சிறுநீர் கழிப்பிடமும்அமைக்கப்படுகின்றன. கோவிலுக்குள், 4 இடத்தில், முதலுதவி, பரிசோதனைகள் செய்யும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. இதைத்தவிர, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை, ஸ்ரீரங்கம், திருச்சியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த கண்ட்ரோல் ரூம் அமைக்கப்படுகிறது.வைகை நிற்கும்: ரயில்வே துறை சார்பில், 23, 24ம் தேதிகளில், ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும். பக்தர்களின் வசதிக்காக, ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் அனைத்து பாசஞ்சர் ரயில்கள், மைசூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இலவச டவுன் பஸ்!தமிழக போக்குவரத்துறை சார்பில், பக்தர்களின் வசதிக்காக, எம்.எல்.ஏ., மனோகரன் சொந்த செலவில், 2 டவுன் பஸ்கள், 23ம் தேதி மாலையில் இருந்து, 24ம் தேதி இரவு வரை, இலவசமாக இயக்கப்படும் என்று தெரிவித்தனர். அதையடுத்து பேசிய அமைச்சர் சிவபதி, "எனது சொந்த செலவில், 3 டவுன் பஸ்கள் என மொத்தம், 5 டவுன் பஸ்கள் இயக்குங்கள் என்றார். மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், திருவானைக்காவல் வழியாக சுற்றி, சுற்றி வரும் இந்த டவுன் பஸ்களில், எங்கு வேண்டுமானாலும் ஏறி, இதே பாதையில் எங்கு வேண்டுமானலும் பக்தர்கள் இறங்கிக்கொள்ளலாம். இந்த பஸ்களில் பக்தர்கள் டிக்கெட் எடுக்க தேவையில்லை.இதில் ஒரு பஸ் மட்டும், மேலச்சிந்தாமணி தேசியக்கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, டூரிஸ்ட் பஸ் பார்க்கிங் வரை சென்று, மாம்பழச்சாலை வந்து, வழக்கமான வட்டப்பணியை தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டிப்பதால், முன்னால் வரும், 750 பக்தர்களுக்கு இலவசமாக வி.ஐ.பி., தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.