காரைக்குடி; காரைக்குடியில் உள்ள 300 ஆண்டு பழமையான இரட்டை ஈஸ்வரர் கோயிலான சுந்தரேஸ்வரர் என்கிற ஈஸ்வரர் கோயில் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில், புனரமைப்பு பணியை விரைந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. காரைக்குடி செஞ்சை பகுதியில் சுந்தரேஸ்வரர் என்கிற ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கொப்புடைய நாயகியம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ், இக்கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில், சிறப்பம்சமாக இரண்டு சிவலிங்கத்திற்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. மேலும் 2 அம்மன், 2 நந்தி, 2 விநாயகர் சிலைகளும் உள்ளன. ஒரு சிவலிங்கத்தின் கோபுரம் முற்றிலும் சேதமடைந்து, திறந்த நிலையில் உள்ளது. மற்றொரு கருவறையில் சிவலிங்கம் மற்றும் அம்மன், விநாயகர் நந்தி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கருங்கற்கள் மற்றும் செம்பராங்கற்கள், சித்துக்கல் மூலம் கோயில் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை புதுப்பிப்பு பணி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எடுத்து வந்தனர். அதனடிப்படையில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
அதிகாரிகள் கூறுகையில்: பழமையான இரட்டை ஈஸ்வரர் கோயிலை பழமை மாறாமல் கட்டுவதற்கான பணிகள் விரைவில் நடைபெறும். முற்றிலும் அகற்றப்படாமல், சேதமடைந்த பகுதிகளை மட்டும் சரி செய்யப்படும். தொல்லியல் துறையின் ஆய்வைத் தொடர்ந்து, ஸ்தபதிகள் கட்டுமான பணிகள் குறித்து பார்வையிட்டனர். முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.