பதிவு செய்த நாள்
18
டிச
2012
11:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா என, இரு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை தரிசிப்பர். வரும், 31ம் தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி, ஒன்றாம் தேதி புத்தாண்டு தரிசனம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கு வருகை தரும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன், ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருத்தணி கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில் நேற்று நடந்தது. இணை ஆணையர் புகழேந்தி வரவேற்றார். கோவில் தக்கார் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கோட்டாட்சியர் கலைவாணி பேசுகையில், ""விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான குடிநீர், கழிப்பறை உட்பட, அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் ஆகியன ஒற்றுமையுடன் சேர்ந்து, சிறப்பாக செய்ய வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு இருந்தால் தான், விழா சிறப்பாக நடத்த முடியும், என்றார். ""வரும், 31ம் தேதி மற்றும் புத்தாண்டு ஆகிய இரு நாட்களுக்கு, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என, ஏ.எஸ்.பி., விஜயகுமார் தெரிவித்தார்.