துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபம் ராஜகோபுரத்துடன் அழகு மிளிர காட்சியளிக்கிறது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடக்கிறது. 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மதியம் 12:00 மணியோடு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 இடங்களில் மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் நடக்கும்போது முக்கிய பிரமுகர்கள் உட்பட 1,200 பேர் மட்டுமே கோவிலுக்கு மேல் பகுதியில் அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
மேலும், கோவில் வளாகத்தில் இருந்து அய்யா கோவில் வரை கடற்கரையோரம் பக்தர்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுவது வழக்கம். இந்த முறை ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம், 20 இடங்களில் பெரிய அளவிலான ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படுகிறது. நீர் நிரப்பப்பட்ட ட்ரோன் கொண்டு கடற்கரையில் ஒத்திகை நடத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.