பதிவு செய்த நாள்
06
ஜூலை
2025
05:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகளுக்கு, கோயில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின் சுவாமி சன்னதி கருவறைக்குள் சென்ற சிருங்கேரி சுவாமிகள், சிவலிங்கத்திற்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால் தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், கங்கை, விபூதியில் அபிஷேகம் செய்து பூஜை செய்து மகா தீபாராதனை நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். இதன்பின் பர்வதர்த்தினி அம்மன் சன்னதி கருவறை மற்றும் சேதுமாதவர் சன்னதி கருவறைக்குள் சென்று பூஜை செய்து மகாதீபாரதனை நடத்தி சுவாமி தரிசனம் செய்தார். 2:05மணி நேரம் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்த சிருங்கேரி சுவாமிகள் மதியம் 12:35 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். பின் சிருங்கேரி மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மதியம் 3:15 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.
தனுர் பானம் பூஜை : ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 6:30 மணிக்கு சிருங்கேரி சுவாமிகள் புறப்பட்டு தனுஷ்கோடி சென்றார். அங்கு ராமாயண வரலாற்றில், சீதை மீட்க ராமர் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடல் அரசன் வழிவிட மறுக்கிறார். உடனே ராமர் அம்புவில்லை தொடுத்ததும், அச்சமடைந்த கடல் அரசன் ராமர் முன் தோன்றி தாங்கள் அவதார புருஷன் மகாவிஷ்ணு. தற்போது மானிடத்தில் வந்துள்ளீர்கள் ஆகையால் வழிவிடவில்லை என வேண்டிக் கொள்கிறார். இதனால் ஒரு வில், ஒருசொல் எனும் ராமர் கொள்ளைக்கு ஏற்ப தொடுத்த வில்லை எய்து கடல் அரசனுக்கு உணவாக வழங்கிதாக கூறப்படுகிறது. இதனை போற்றும் வகையில் சிருங்கேரி சுவாமிகள், தனுஷ்கோடி கடற்கரை மணலில் வில்அம்பு வரைந்த பூ அலங்காரத்தில் தனுர் பானம் பூஜை செய்து, அதன் மணலை எடுத்து கடலில் கரைத்த பின் புனித நீராடினார். இதன்பின் காலை 8:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த சிருங்கேரி சுவாமிகள், 22வது கோடி தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு மடத்திற்கு சென்றார்.