திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் 23 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு நேற்று காலை பாலாலயத்துடன் பணிகள் தொடங்கின. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம், காசிக்கு செல்ல முடியாதவர்கள் பலரும் திருப்புவனம் வந்து முன்னோர்களின் அஸ்தியை கரைத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வார்கள், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இக்கோயிலில் கடந்த 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பபிஷேகம் நடத்தப்பட வேண்டும், 23 வருடங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துவந்த நிலையில் நேற்று காலை கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. நேற்று காலை ஆறு மணிக்கு செந்தில், சிவா, பாபு, விவேக்,விக்னேஷ், சுரேஷ் சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து பிராகாரத்தை வலம் வந்து பாலாலயத்தை நடத்தி வைத்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.