8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் திறப்பு; கிராமத்தில் கடைகள் அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 04:07
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் இன்று திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது.
வெள்ளபொம்மன்பட்டியில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக் கிடந்தது. 13 ஆண்டுகள் கடந்தும் கும்பாபிஷேகமும் நடக்காமல் இருந்தது. இதுகுறித்து தாக்கலான வழக்கை தொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தலில் தாசில்தார் சுல்தான்சிக்கந்தர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடந்தது. இதில் இரு தரப்பு சமாதான உடன்பாடு ஏற்பட்டு ஜூலை 8ல் ஒரு தரப்பினர் அமைதியாக சிறு வழிபாடு நடத்துவது, ஆக.23ல் அனைவரும் கோயிலில் அமர்ந்து கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி குறித்து ஊர்கூட்டம் நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்று கோயில் திறக்கப்பட்டு ஒரு தரப்பினர் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் வழிபாடு நடத்தி சென்றனர். மற்றொரு தரப்பினர் இதுவிஷயத்தில் முழு சமரசமாகவில்லை என்பதால் கிராமத்தில் எல்லா கடைகளையும் அடைத்து வைத்ததுடன், கோயில் பகுதிக்கும் வருவதையும் தவிர்த்தனர்.