சென்னை; திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில், காஞ்சி மடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், மூன்று கோவில்களின் கும்பாபிஷேகங்களை நடத்தி, பக்தர்களை ஆசிர்வதித்தனர்.
காஞ்சி சங்கரமடத்தின்மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அக்ரஹாரத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்வி கற்றதும், தந்தையிடம் வேதம் பயிலத் தொடங்கியதும் தண்டலம் கிராமத்தில்தான். அதனால், இரண்டு கிராமங்களும் சுவாமிகளுக்கு சொந்த ஊர் போலத்தான். காஞ்சி மடாதிபதி, தன் தாய் மண்ணான ஆரணிக்கு நேற்று முன்தினம்விஜயம் செய்தார். அவர் பிறந்த இல்லத்தில், காஞ்சி மடத்தின் ஆரணி கிளை அமைந்துள்ளது. அந்த இல்ல முகப்பில் உள்ள ஆதிசங்கரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை நடந்தது. குருவின் உத்தரவை ஏற்று, 7௧வது மடாதிபதிசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கும்பாபிஷகத்தை நடத்தி வைத்தார். அடுத்து, தண்டலத்தில்உள்ள பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தையும், காஞ்சி மடாதிபதிகள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காமாட்சி அம்மன் சமேத தரணீஸ்வரர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தையும் மடாதிபதிகள் நடத்தி வைத்தனர். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு வழங்கிய அருளாசியில், ‘‘ஒருவரின் தாய் எவ்வளவு சிறந்தவரோ, அதேபோல் அவரது தாய்நாடும் போற்றுதலுக்குரியது. தவத்தின் மூலம் கிடைக்கும் சொர்க்கத்தைவிட, தாய் மற்றும் தாய்நாடு மேன்மையானது,’’ என்றார். தண்டலம் கிராமத்தில், காஞ்சி மடம் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.