பதிவு செய்த நாள்
14
ஜூலை
2025
06:07
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி என்பவரால் எழுப்பப்பட்டது. கோயிலின் கோபுரம் 1505ல் கட்டப்பட்டது. கோயிலின் திருமதில் வீரப்ப நாயக்கர் காலத்தில் 1583 ல் கட்டப்பட்டது. அதோடு கோபுர வாயிலுக்கு மேற்கே யானை கட்டும் தறியும் அமைத்துக் கொடுத்தார்.
வீரப்ப நாயக்கர் (1572 – 1595), திருமலை நாயக்கர் (1623 –1659), ராணி மங்கம்மாள் (1689 – 1706) ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர். கோபுரத்தில் ‘ஓம் முருகா’ என்னும் மின்விளக்கு இரவில் ஒளிர்வதை பார்ப்போம். போடி நாயக்கனுாரைச் சேர்ந்த ஏ. எஸ். சுப்பராஜூ என்பவர்தான் இத்திருப்பணியை செய்தார்.
* தலம் – திருப்பரங்குன்றம்
* காலம் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது
* சுவாமி – விநாயகர், சத்தியகிரீஸ்வரர், சுப்பிரமணியர், பவளக்கனிவாய் பெருமாள்,
* அம்மன் – துர்கை, தெய்வானை
* தீர்த்தம் – சரவணப்பொய்கை, பிரம்ம கூபம்
திருவனந்தல்: அதிகாலை 5:30 – 6:00 மணி
விளாபூஜை: காலை 7:30 – 8:00 மணி
காலசந்தி: காலை 8:00 – 8:30 மணி
திருக்கால சந்தி: காலை 10:45 – 11:00 மணி
உச்சிக்காலம்: காலை 11:30 – 12:00 மணி
சாயரட்சை: மாலை 5:30 – 6:00 மணி
அர்த்த ஜாமம்: இரவு 9:00 – 9:45 மணி
பள்ளியறை: இரவு 9:45 – 10:00 மணி
தினமும் திருப்பரங்குன்றத்தில் எட்டுக்கால பூஜை நடக்கிறது. விசேஷ நாட்களில் இது மாறுபடும்.
உனைப்பாடும் தொழிலின்றி வேறில்லை
திருப்பரங்குன்ற முருகனை சங்ககாலம் முதல் இக்காலம் வரை பலரும் போற்றி பாடியுள்ளனர். அதைப்பற்றி அறிந்து கொள்வோமா...
1. திருமுருகாற்றுப்படை : நக்கீரர்
2. அகநானுாறு (59): மருதனிள நாகனார்
3. அகநானுாறு (149): எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
4. கலித்தொகை (27): மருதனிள நாகனார்
5. கலித்தொகை (93): பெருங்கடுங்கோன்
6. பரிபாடல்(5): கடுவன் இளவெயினனார்
7. பரிபாடல்(6): நல்லந்துவனார்
8. பரிபாடல்(8): 130 அடிகளை கொண்டது: நல்லந்துவனார்
9. பரிபாடல்(9): குன்றம்பூதனார்
10. பரிபாடல்(14): கேசவனார்
11. பரிபாடல்(17): நல்லழிசியார்
12. பரிபாடல்(18): குன்றம்பூதனார்
13. பரிபாடல்(19): நப்பண்ணனார்
14. பரிபாடல்(21): நல்லச்சுதனார்
15. மதுரைக்காஞ்சி: மாங்குடி மருதனார்
17. தேவாரம்: திருஞானசம்பந்த நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள்
18. தேவார வைப்புத்தலப் பாடல்: திருநாவுக்கரசு சுவாமிகள்
19. திருக்கோவையார்: மாணிக்கவாசக சுவாமிகள்
20. பெரியபுராணம்: தெய்வச்சேக்கிழார்
21. கந்தபுராணம்: கச்சியப்ப சிவாச்சாரியார்
22. கந்தபுராணச் சுருக்கம்: சம்பந்த சரணாலய சுவாமிகள்
23. திருவிளையாடல் புராணம்: பரஞ்ஜோதிமுனிவர்
24. திருவிளையாடல் புராணம்: பெரும்பற்றுப்புலியூர் நம்பிகள்
25. திருப்புகழ்: அருணகிரி நாதர்
26. திருவகுப்பு: அருணகிரிநாதர்
27. திருப்பரங்கிரி திருப்புகழ்: இராம.சுப்பிரமணியம் (மணிமன்ற அடிகள்)
28. திருப்பரங்குன்றப்பதிகம்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
29. பரங்கிரிப்பதிகம்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
30. படைவீட்டுத்திருப்புகழ்: வண்ணச்சரபம் தண்டாபணி சுவாமிகள்
31. படைவீட்டுப்பதிகம்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
32. கந்தர் சஷ்டிக் கவசம்: தேவராய சுவாமிகள்
33. திருப்பரங்கிரிப் புராணம்: நிரம்பழகிய தேசிகர்
34. திருப்பரங்கிரி பிரபாவம்: கூடலிங்கம் பிள்ளை
35. திருப்பரங்கிரி பிள்ளைத்தமிழ்: மு.ரா.அருணாசல கவிராயர்
36. திருப்பரங்கிரி பாமாலை: மு.ரா.அருணாசல கவிராயர்
37. திருப்பரங்கிரி கலித்துறை அந்தாதி : மு.ரா.அருணாசலக்கவிராயர்
38. திருப்பரங்கிரி பதிற்றுப்பத்து அந்தாதி : மு.ரா.அருணாசலக்கவிராயர்
39. திருப்பரங்கிரி வெண்பா அந்தாதி : மு.ரா.அருணாசலக்கவிராயர்
40. திருப்பரங்கிரி அலங்காரம்: மு.ரா.அருணாசலக்கவிராயர்
41. திருப்பரங்கிரி மும்மணிக்கோவை: மு. ரா.அருணாசலக்கவிராயர்
42. திருப்பரங்கிரி அனுபூதி: மு.ரா.அருணாசலக்கவிராயர்
43. திருப்பரங்கிரி கோவை: மு.ரா.அருணாசலக் கவிராயர்
44. திருப்பரங்கிரி துதி மஞ்சரி: மு.ரா.அருணாசலக் கவிராயர்
45. திருப்பரங்குன்றத் திருவாயிரம்: கனகராஜ ஐயர்
46. திருப்பரங்குன்றக் கலம்பகம் : கனகராஜ ஐயர்
47. திருப்பரங்குன்றக் குறவஞ்சி: கனகராஜ ஐயர்
48. திருப்பரங்குன்றக் கோவை: கனகராஜ ஐயர்
49. திருப்பரங்கிரி மும்மணிக்கோவை : பாலகவி. வே. ராமநாதன் செட்டியார்
50. திருப்பரங்கிரி பதிற்றுப்பத்து அந்தாதி: மு. கோவிந்தசாமி ஐயர்
51. திருப்பரங்குன்றம் முருகமணிமாலை: மதுரை மதுரஞ்சுந்தர பாண்டியனார்.
52. திருப்பரங்குன்ற மாலை: கனகராஜ ஐயர்
53. திருப்பரங்கிரி மாலை: வள்ளிநாயகம் பிள்ளை
54. சிவசுப்பிரமணியர் திருப்பரங்கிரி மாலை: சேவுகப் பெருமாள் உபாத்தியாயர்
55. திருப்பரங்கிரிக் கட்புலமாலை: எல். ஏ. வெங்குசாமி ஐயர்
56. திருப்பரங்குன்றாதிபன் மாலை: எஸ். அய்யாசாமி பிள்ளை
57. மேலைப்பரங்கிரி மாலை: சி.பி. அப்பாவுக்கவிராயர்
58. திருப்பரங்குன்றம் கந்தசாமி பதிகம்: மு. கோவிந்தசாமி ஐயர்
59. திருப்பரங்கிரிப்பதிகம்: பி. பாஸ்கர ஐயர்
60. திருப்பரங்கிரி பதிகம்: காஞ்சிபுரம் சிங்காரவேலு தேசிகர்
61. திருப்பரங்குன்றம் முருகன் மீது திருவருட்பதிகம்: சுப்பிரமணியக்கவிராயர்
62. திருப்பரங்கிரி முருகனின் அருட்பதிகம்: சுப்பிரமணிய செட்டியார்
63. திருப்பரங்குன்றம் முருகன் வினை நீத்தல் விண்ணப்பப் பதிகம்: சுப்பிரதீபக் நாயக்கர்
64. திருப்பரங்கிரி பதிகம்: முத்துசாமி
65. திருப்பரங்கிரிப் பதிகம் : வெள்ளையாண்டிப்பிள்ளை
66. திருப்பரங்கிரி முருகேசர் பதிகம்: சுப்பையா நாயுடு
67. திருப்பரங்குன்றம் திருப்பள்ளி எழுச்சிப்பதிகங்கள்: லிங்கதாஸ்
68. திருப்பரங்கிரி முருகக்கடவுள் யமகப்பதிகம்: க. மா. முத்துசாமி மூப்பனார்
69. திருப்பரங்கிரி பதிகங்கள்: பாம்பன்சுவாமிகள்
70. சோடச பிரபந்தம்: கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள்
71. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் தோத்திரம்: இ. ஆர். எம். குருசாமி கோனார்
72. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியரின் ஆனந்த களிப்பு: வேம்பத்துார் சிலேடைப்புலி பிச்சுவையர்.
73. திருப்பரங்கிரி குமரவேள் தலாட்டு: ராமசாமி செட்டியார்
74. திருப்பரங்கிரி குமரனுாசல்: எவ்வுளூர் இராமசாமி செட்டியார்.
75. திருப்பரங்கிரி முருகக்கடவுள் பேரில் தாய்மகள் ஏசல்: வள்ளிநாயகம் பிள்ளை
76. திருப்பரங்கிரி சிலேடை வெண்பாவும் சிலேடை பாடல்களும்: மு. முத்துச்சாமி பாவலர்
77. திருப்பரங்குன்றம் காவடிச் சிந்து: சித்தனாசாரியார்
78. திருப்பரங்குன்றம் காவடிச் சிந்து: நாராயணசாமி முதலியார்
79. திருப்பரங்குன்றம் காவடிச்சிந்து: நா. கிருஷ்ணசாமி நாயுடு
80. கந்தகிரி காவடிச்சிந்து: ராஜ வடிவேல் தாசர்.
81. திருப்பரங்குன்றம் வழிநடை காவடிச்சிந்து: க.ஒய். முத்துச்செல்லமாச்சாரி
82. திருப்பரங்குன்றம் நுாதனக்காவடிச் சிந்து: குப்பாத்தேவர்
83. திருப்பரங்குன்றம் காவடிச் சிந்தெனும் பாவடிச் சந்தம்: லிங்கதாஸ் சாமியார்
84. திருப்பரங்குன்றம் வழிநடைச்சிந்து : ஏ. பொன்னுச்சாமித் தேவர்
85. திருப்பரங்குன்றம் மஹத்துவச் சிந்து: ஆர். சொக்கலிங்கம் பிள்ளை
86. திருப்பரங்குன்றம் பஜனைக் கீர்த்தனை மாலை: கிருஷ்ண பாகவதர்
87. திருப்பரங்கிரி சுப்பிரமணிய பஜனைக்கீரத்தனம்: எஸ். முத்தையா பிள்ளை
88. திருப்பரங்குன்றம் பஜனைக் கீர்த்தனைகள்: வேலுார் நாராயணசாமி பிள்ளை
89. தனிப்பாடல்கள்: தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்
90. இயற்றியவர் பெயர் இல்லாமலும் ஓலைச்சுவடியாகவும் உள்ள நுால்கள்
* திருமுருகாற்றுப்படை பழைய வெண்பாக்கள்
* திருப்பரங்குன்ற புராணம்
* திருப்பரங்குன்றம் பாமாலை
* திருப்பரங்குன்றம் முருகன் பாட்டு
இவை தவிர ஆறுபடை திருத்தலம் தொடர்புடைய நுால்கள், அதற்குரிய வசனம், உரைநடை, இப்பகுதி மக்களின் சமூக பழக்கவழக்கம், பண்பாடு நடைமுறையை விளக்கும் நுால்களிலும் திருப்பரங்குன்ற முருகன் பற்றிய நுால்களும் உள்ளன.
* சித்தர்கள், முனிவர்கள், புலவர்கள் என பலராலும் போற்றப்பட்டுள்ளது.
* தேவாரம் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் பதினான்கு தலங்களில் ஒன்றாகவும், அறுபடைவீடுகளில் முதலாவதாகவும் இடம் பெற்ற தலம்.
* பிரகாரமே இல்லாத ஒரு சிவன், முருகன் கோயில் இது
* இம்மலையை சிவலிங்கமாக நினைத்து தினமும் வலம் வருபவர்களின் வினை தீரும் என்கிறார் திருஞானசம்பந்தர்.
* முருகனின் ஆணைப்படி நக்கீரரை சிறைப்பிடித்தனர் சிவகணங்களான அண்டாபரணர், உக்கிரமூர்த்தி. இவர்களுக்கு இங்கு சன்னதி உள்ளது.
* திருப்பரங்குன்ற முருகனின் வழிபாட்டிற்கு மனம் உவந்து அபிேஷகப் பொருட்கள் கொடுங்கள். அப்படி செய்தால் சூரியசந்திரர் உள்ளவரை உங்களின் புகழ் நிலைத்து இருக்கும்.
* சரவணப்பொய்கையில் நீராடி முருகனை வழிபடுபவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் அடைவர்.
* சத்திய கூபத்தில் நீராடி முருகனை வழிபடுபவர்களுக்கு சகல பாவங்களும் தீரும். அரிச்சந்திரனை போல் வாழ்வர்.
* துாய மனதுடன் இத்தலத்தில் வசிக்க வேண்டும் என நினைத்தாலே, சிவசாரூபம் (சிவனைப்போன்ற தோற்றம்) உடைய பதவியை அடைவர்.
* கார்த்திகைதோறும் விரதம் இருந்து முருகனை தரசித்தால், அடுத்தபிறவியில் அரசாளும் தகுதியை பெறலாம்.
* சோமவாரம்தோறும் (திங்கட்கிழமை) விரதம் இருந்து பரங்கிரிநாதரை தரிசித்தால், மனநிறைவான வாழ்வினை இப்பிறவியிலேயே பெறலாம்.
* கொலை, பொய், களவு, கள்ளுண்ணல், குரு நிந்தனை ஆகியவை பஞ்மாபாதகங்கள் ஆகும். இப்பாவத்தை செய்தவர்கள் மனம் வருந்தி, சன்னதிக்கு வந்து 1008 முறை முருகன் பெயரை சொன்னால் போதும். அடுத்த பிறவியில் இதனால் வரும் துன்பம் அறுபடும்.
* நிரம்பழகிய தேசிகர் என்பரவால் திருப்பரங்குன்றத்தின் தல புராணம் இயற்றப்பட்டது. இதன் பெயர் ‘திருப்பரங்கிரி தல புராணம்’ ஆகும். இதை 1882 ல் திருப்பரங்கிரியில் வசித்த நாராயண சரணர் என்பவர் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
* இப்புராணம் மீண்டும் 1928 ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதை மதுரை நான்காம் தமிழ்ச்சங்கப்புலவரான எட்டிச்சேரி. மு.ரா.அருணாசலக்கவிராயர் வெளியிட்டார்.
பழமையான இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று என்றெல்லாம் திருப்பரங்குன்றம் அழைக்கப்பட்டுள்ளது. பரன்குன்று என்பதன் சமஸ்கிருத வடிவம் பரங்கிரி. இங்குள்ள சுவாமி பரங்கிரிநாதர். தண்பரங்குன்று என்பது குன்றத்தின் குளிர்ச்சியையும், தென்பரங்குன்றம் என்பது மதுரைக்குத் தெற்கில் இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. பரம் என்றால் உயர்ந்தது, இதற்கு அப்பாற்பட்டது ஏதுமில்லை என்பது பொருள். வாயுபகவான் வீசியெறிந்த கந்தமாதன மலையின் ஒரு கூறே இப்பரங்குன்று என்று புராணம் கூறுகிறது. மேலும் திருப்பரங்கிரி, பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்தமலை என்றும் பெயர் உண்டு.
இம்மலை வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கிப் பார்க்கும்பொழுது கைலாய மலையாகவும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பார்க்கும் பொழுது பெரும் பாறையாகவும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பார்க்கும் பொழுது பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பார்க்கும் பொழுது பெரிய சிவலிங்க வடிவாகவும் காட்சியளிப்பது சிறப்பு.
அறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் கீழ்க்கண்ட பலனை பெறலாம்.
* திருப்பரங்குன்றம் – திருமணம் நடக்கும்.
* திருச்செந்துார் – வீரம் வரும்.
* சுவாமிமலை – கல்வியில் சிறக்கலாம்.
* திருத்தணி – மங்கலம் உண்டாகும்.
* சோலைமலை – மோட்சம் கிடைக்கும்.
மதுரை, திருவேடகம், திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், பிரான்மலை, திருப்பத்தூர், திருப்புவனவாசல், ராமேஸ்வரம், திருவாடானை, காளையார்கோவில், திருப்புவனம், குற்றாலம், திருச்சுழி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை கோயில்களை பாண்டி பதினான்கு கோயில் என்பர். இவை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். இதில் திருப்பரங்குன்றம் மட்டும் முருகனுக்கும் அறுபடை வீடாக உள்ளது. இங்கு வழிபட்டால் தந்தை சிவபெருமானின் அருளும், மகன் முருகனின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
திருமணக்கோலத்தில் முருகன்
முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த முருகன் வெற்றிப்பரிசாக தெய்வானையை மணந்த தலம் இதுவாகும். இதனால் இது திருமணத் தலமாக விளங்குகிறது. கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கையம்மன், சுப்பிரமணியர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. இங்கு பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில் தெய்வானை, முருகன் திருக்கல்யாண விழா நடக்கிறது.
* சிபிச்சக்கரவர்த்தி பூமி தானம் செய்தார். அப்போது ஒரு ஆள் குறைந்தது. இதனால் சக்கரவர்த்தி வருந்தினார். அதைப்போக்க பரங்கிரிநாதரே மனித வடிவில் வந்து அதை பெற்றுக் கொண்டார்.
* உண்மையை மட்டுமே பேசிய அரிச்சந்திரன் இங்கு முருகனுக்கு விழா எடுத்தார். இதனால் மோட்சமும் பெற்றார்.
* முன்பொரு காலத்தில் முருகன் மீது பக்தி கொண்ட பெண் இங்கு வாழ்ந்தாள். அவளுக்கு கல்யாணம் ஆனது. அப்போதும் அவளது வாயில் இருந்து ‘முருகா முருகா’ என்ற வார்த்தையே வந்தது. இதனால் கோபம் கொண்ட கணவனான அந்தப்பாவி அவளது கையை வெட்டினான். தன் பக்தையை தவிக்க விடுவாரா முருகன்... அவரது அருளால் வெட்டிய கைகள் மீண்டும் வளர்ந்தன. இந்நிகழ்ச்சி குறித்த பழம்பாடல் ஒன்றும் உள்ளது. அப்பாடல்,
ஓம்முருகா என்றென்உள் ளங்குளிர உவந்துடனே
வருமுருகா என்றுவாய் வெருவாநிற்பக் கையிங்ஙனே
திருமுருகா என்றுதான்புலம் பாநிற்கும் தையல்முன்னே
திருமுருகாற் றுப்படையுட னேவரும் சேவகனே
திருமலையன் மாற்றி வைத்தான் திருப்பரங்குன்றத்தை
இன்றைய திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் சிறந்த தலமாக உள்ளது. 8ஆம் நுாற்றாண்டில் சாத்தன் கணபதி என்பவரால்தான் இக்கோயில் கட்டப்பட்டது. ஆனால் இது சிவபெருமானுக்காகத்தான் கட்டப்பட்டது என இங்குள்ள கிரந்தக் கல்வெட்டு கூறுகிறது. பிறகு ஆவுடைநாயகி அம்மனுக்கு 12ஆம் நுாற்றாண்டில் தனிக்கோயில் கட்டப்பட்டது. இப்படி பல நுாற்றாண்டுகளாக சிவனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு எப்போது இருந்து முருகன் கோயிலாக மாறியது?
13ம் நுாற்றாண்டிற்கு அப்புறம்தான். இதற்கு பின் மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. இதற்கு சான்று ‘திருமலையன் மாற்றி வைத்தான் திருப்பரங்குன்றத்தை’ என்ற பழமொழி கவனியுங்கள். மன்னன் எவ்வழியோ அவ்வழிதானே மக்களும். மன்னனைத் தொடர்ந்து மக்களும் முருகனுக்கு சிறப்புச் செய்ய ஆரம்பித்தனர். திருமலை நாயக்கர் தம் மனைவியரோடு முருகனை வணங்கிய நிலையில் உள்ள சிற்பத்தை நாம் பார்க்கலாம்.
பனைமரப்படியேறி தரிசித்தோம்
மதுரையில் மாடக்குளம் என்ற ஊர் உள்ளது. இவ்வூர் சங்க இலக்கியங்களில் ‘மாடமோங்கிய மல்லன் மூதுார்’ என்றும், கல்வெட்டுகளில் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாடம் சூழ்ந்த குளம் என்ற பெருமைகளை கொண்டது.
இங்கு ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர் திருப்பரங்குன்ற முருகன் மீது அலாதி பக்தி கொண்டு இருந்தார். அவர் தினந்தோறும் இங்கிருந்து ஒற்றையடிப்பாதை வழியாக நடந்து குன்றத்தை அடைவார்.
அக்காலத்தில் இப்போதுள்ளது போல் மண்டபம், கோபுரம் எல்லாம் கிடையாது. தற்போது நாம் பார்க்கும் கருவறை அப்போது வெட்ட வெளியாக இருக்கும். படிகளும் கிடையாது. முருகனோ உயரத்தில் குடைந்து செதுக்கப்பட்டிருப்பார். கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவு உயரத்தில் இருப்பவரை, நேருக்கு நேரே நின்று வணங்குவது எப்படி? இதற்காக பனைமரத்தினால் செய்யப்பட்ட கட்டைகளை படிகளாக அமைத்தனர். அந்த படிகளில் ஏறி முருகனுக்கு பூஜை செய்வார் அந்த அந்தணர். இப்படி பக்தர்கள் யாவும் இந்த நடைமுறையை பின்பற்றியே வழிபட்டுள்ளனர். இதை திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த முதல் ஸ்தானிகர் ரா.பிச்சைப்பட்டர், ஆய்வாளர் ஒருவரிடம் சொல்லியுள்ளார்.
* முற்காலத்தில் ஒவ்வொரு தமிழ்மாதப்பிறப்பு அன்று திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள மக்கள் ஒன்று கூடுவர். அதிகாலையில் சரவணப்பொய்கையில் நீராடிவிட்டு முருகனை தரிசிக்க செல்வர். அப்போது அவரது அருமை, பெருமை, திருவிளையாடல்களை கும்மிப்பாடலாக பாடி கோயிலை அடைவர்.
* சிலர் கார்த்திகைதோறும் சாப்பிடாமல், மவுன விரதம் இருந்து முருகனை தரிசிக்கவும் செய்வார்கள்.
ஒருமுறை திருப்பரங்குன்ற கோயிலை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஊர்ச்சபைக்கு ஓலை அனுப்பினர் ஆங்கிலேயர்கள். சபையினரோ ‘ஒப்படைக்க மாட்டோம்’ என்றனர். இதனால் கோபப்பட்ட ஆங்கிலேயப்படை திடீரென ஊருக்குள் புகுந்தது. மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அப்போது ‘குட்டி’ என்ற இளைஞன் கோயிலை நோக்கி ஓடோடி வந்தான். விறுவிறு என்று கோயில் கோபுரத்தின் மீதேறினான்.
‘இந்த அநியாயத்தைத் தடுக்க யாரும் இல்லையா? இதோ... என் முருகனுக்காக முதல் பலியாகிறேன் என்று சொல்லி குதித்துவிட்டான். அடுத்த நிமிஷமே, குட்டி இறந்த செய்தி ஊர் முழுதும் பரவியது. கடலென மக்கள் சூழ்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைமை மோசமடைவதற்கு முன் ஆங்கிலேயப் படையினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இச்செய்தி கோயில் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.