பதிவு செய்த நாள்
14
ஜூலை
2025
06:07
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். எங்கும் பக்தர்களின் அரோகரா கோஷம் குன்றத்தை அதிரவைத்தது.
முதுமை என்றால் பழமை. சங்க காலத்திற்கு முன்பு இருந்தே முதுமையான ஊர் மதுரை. சங்ககாலம் என்றால் கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் ஆகும். அப்படிப்பட்ட சங்ககாலத்திற்கே முன்பே மதுரை நகரமாக இருந்துள்ளது. இந்நகரில் தான் பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்துள்ளார்கள். இதன் அருகே அமைந்ததுதான் முதுகுன்றாமாகிய திருப்பரங்குன்றம். இதன் பெருமையை சங்கநுால்களில் காணலாம். அவற்றில் பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானுறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சியில் திருப்பரங்குன்றம் சிறப்பிடம் பெற்றுள்ளது. அதில் உள்ள விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.
* முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். இதற்கு தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல பெயர்கள் உண்டு.
* சங்ககாலத்தில் தமிழகத்தை ஐந்து வகை நிலமாக பிரித்தனர். மலையும் அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் அதைச் சார்ந்த இடமும் முல்லை, வயலும் அதைச் சார்ந்த இடமும் மருதம், கடலும் அதைச் சார்ந்த இடமும் நெய்தல், வறண்ட நிலமும் மணல் நிறைந்த இடமும் பாலை என்பதே அந்த ஐவகை நிலம். இதில் மலையில் வாழ்ந்தவர்கள் வழிபட்ட தெய்வமே முருகன். மனித நாகரிகம் முதன் முதலில் மலையில்தான் வாழ்ந்துள்ளனர். காரணம் மழை, புயல், வெள்ளம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க அந்த இடமே அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. இப்படி மலை இருந்த இடமெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தனர். அவர்கள் எல்லாம் முருகனையே வழிபட்டனர். இதனால்தான் ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்ற பழமொழி உருவானது.
* முருகனுக்கு பல கோயில்கள் உள்ளன. அதில்
2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3. திருவாவினன்குடி (பழநி)
4. திருவேரகம் (சுவாமிமலை)
5. குன்றுதோராடல் (திருத்தணி)
ஆகிய ஆறு தலங்களும் அறுபடை வீடுகள் ஆகும். ‘ஆற்றுப்படை வீடு’ என்பதே தற்போது அறுபடை வீடுகள் என அழைக்கப்படுகிறது. ஏன் இப்படி மருவியது?
ஆற்றுப்படை இலக்கியம் என்பது சங்க இலக்கியத்தின் ஒரு வகை. புலவர் ஒருவர் அரசரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடி பரிசு பெற்று இருப்பார். அவர் தன்வீட்டிற்கு திரும்பும் வழியில், வாடிய முகத்துடன் வரும் புலவரை பார்ப்பார். அவரிடம், ‘இந்த ஊரில் அரசர் அல்லது வள்ளல் இருக்கிறார். அந்த ஊருக்கு செல்லும் வழி இது. இவ்வழியாக சென்று பாடி உனது துன்பத்தை போக்கிக்கொள்’ என வழிகாட்டுவார். இதற்கு ‘ஆற்றுப்படுத்துதல்’ என்று பெயர். இப்படி பரிசு பெற்ற புலவர், மற்றொரு புலவருக்கு வழிகாட்டும்படி பாடல்கள் அமையும். இதுதான் ஆற்றுப்படை இலக்கியம். இதில் திருமுருகாற்றுப்படை என்பது முருகனின் பெருமைகளை பற்றி பேசும் நுாலாகும். இப்படி
சங்க காலம் முதலே திருப்பரங்குன்றத்தில் முருக வழிபாடு இருந்துள்ளது.
* நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் ‘மாடமலிமறுகில் கூடற்குடவாயன்’ என்றும், கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் எழுதப்பட்ட கந்த புராணத்தில் ‘கூடலின் குட திசை அமர பரங்குன்று’ என்றும் திருப்பரங்குன்றம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
* முருகன் குன்றம் (59) என்றும், ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (149) என்றும் அகநானுாறு சொல்கிறது.
* ‘தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (264) என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.
* திருப்பரங்குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் பரிபாடல் குறிப்பிடுகிறது. இதுபோல் சங்ககால நுால்கள் பலவும் குன்றத்தின் மகிமையை போற்றுகிறது.
* குன்று சிவலிங்க வடிவில் அமைந்துள்ளதால் பரங்குன்று என்றும், சிவன் ‘பரங்குன்றநாதர்’ என்றும் பெயர் பெற்றுள்ளார். பரம் என்பது சிவனைக் குறிக்கும். சிறப்பை உணர்த்தும் விதமாக ‘திரு’ அடைமொழியுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் ஆனது.
* இன்றும் குன்றையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபடும் வழக்கம் உள்ளது.
* இக்குன்றை வடக்கில் இருந்து பார்க்கும் பொழுது கைலாய மலை போன்றும், கிழக்கில் இருந்து பார்க்கும்பொழுது பெரும் பாறையாகவும், தெற்கில் இருந்து பார்க்கும்போது பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கில் இருந்து பார்க்கும்போது பெரிய சிவலிங்க வடிவமாகவும் காட்சி தரும்.
* தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகிய ஆறு பேரும் பராசர முனிவரின் மகன்கள். இவர்கள் தந்தையின் பேச்சை கேட்காமல் ஒழுக்கம் தவறினர். எனவே அவர்களை மீனாக மாறும்படி பராசரர் சாபமிட்டார். இவர்கள் திருப்பரங்குன்றத்தில் சரவணப்பொய்கையில்தான் வாழ்ந்தனர். ஒருநாள் முருகன் சரவணப்பொய்கையில் பார்வதியிடம் பால் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பால் துளிகள் அந்த மீன்கள் மீது விழவே சாபவிமோசனம் பெற்றனர். பின் இந்த ஆறு பேரும் பரங்குன்றம் முருகனைத் வழிபட்டு ஞானயோகம் அடைந்தனர்.
* திருவிழாக் காலங்களில் இங்கு சிவபெருமானுக்கு கொடியேறுகிறது. ஆனால் முருகன்தான் புறப்பாடு ஆவார். ஏனெனில் சிவபெருமானின் அம்சம்தானே முருகன். ஆதலால் முருகனுக்கு இங்கு, ‘சோம சுப்பிரமணியர்’ என்ற பெயரும் உண்டு. சோமன் என்றால் சிவன்.
* தேவர்களின் தலைவனான இந்திரனின் மகள்தான் தெய்வானை. அவரது விருப்பத்திற்கு இணங்க பங்குனி உத்திர நாளில் முருகன் தெய்வானையை கரம்பிடித்தார்.