திருத்தணி; முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக முனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இங்கு, 10 அடி உயரம் கொண்ட முனீஸ்வரர் சிலையும் வடிவமைக்கப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல்கால மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக சாலையும், நான்காம் கால பூஜையும் நடந்தது. காலை 8:30 மணிக்கு கலச ஊர்வலமும், முனீஸ்வரர் சிலைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், எஸ்.அக்ரஹாரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.