தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனி கோயில் தேனி மாவட்டம் குச்சனூரில் மட்டுமே உள்ளது. இங்கு சனீஸ்வரபகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால், இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வர பகவான் இரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால், நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும், இங்கு பெருந்திருவிழா நடைபெறும் . ஆடி மாதம் முதல் நாள் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். ஜூலை 17ஆடி முதல் தேதி என்பதால் கொடியேற்றம் நடைபெற வேண்டும். ஆனால் கடந்தாண்டை போலவே இந்தாண்டும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். எனவே கொடியேற்றம் செய்ய முடியாது. கடந்தாண்டு ஹிந்து சமய அறநிலைய துறையின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கொடியேற்றம், சுவாமி புறப்பாடு தவிர மற்ற நிகழ்ச்சிகளை நடத்த ஜகோர்ட் உத்தரவிட்டது. ஆடிப் பெருந் திருவிழாவில் மூன்றாவது வாரம் பெரும் திருவிழாவாகவும், சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சன காப்பு சாத்துதல், முளைப்பாரி ஊர்வலத்துடன், சக்தி கரகம் கலக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் திருக்கல்யாணம் வழக்கம் போல நடைபெறும். சனிக்கிழமைகளில் வழக்கம் போல சுவாமி தரிசனம் செய்ய அனுமதி உண்டு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐகோர்ட் உத்தரவில் கூறியபடி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ரூ 1 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் உபயதாரர்களால் பணிகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். இது தொடர்பாக செயல் அலுவலர் ஜெயராமன் கூறுகையில் , " வழக்கம் போல ஆடி மாதம் பக்தர்கள் கோயிலிற்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஐகோர்ட் உத்தரறப்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் " என்றார்.