ஸ்ரீபெரும்புதுார்; ஆனி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, மயிலிறகு மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார். இக்கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 7 ம் தேதி, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. இதை தொடர்ந்து, ஆனி மாத நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று காலை, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகபெருமான் மயில் இறகு மாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகர அரோகர கோஷமிட்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார்.