குன்னத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2025 12:07
அன்னூர்; குன்னத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குன்னத்தூரில், சத்தி சாலையில், பழமையான படைவேட்டம்மன் என்று அழைக்கப்படும் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சோழ அரசர்களால் கட்டப்பட்டது.
பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது ஒன்பது சிலைகள் அமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றுள்ளது. கடந்த 14ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. குன்னத்தூர் பழனியாண்டவர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வரப்பட்டது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதலும் நடந்தது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார். நேற்று காலை 10:00 மணிக்கு விநாயகர், பட்டத்தரசி அம்மன், பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்களும் சிவாகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. நாக சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.